குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியது ஈராக்!

ஈராக்கில் குழந்தைகள் திருமண சட்டம் நிறைவேற்றப்பட்டிக்கிறது. புதிய சட்டத்தின்படி இனி 9 வயது குழந்தைகளுக்கும் திருமணம் செய்து வைக்க முடியும்.

ஈராக்கில் கடந்த 1959ம் ஆண்டு முதல் குழந்த திருமணம் என்பது சட்டப்பூர்வமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது செய்யப்பட்டது சிறு மாற்றம்தான். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இதற்கான சட்டம் நேற்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த சட்டத்தின்படி இனி ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் 9 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கலாம். சன்னி இஸ்லாமிய பெண்களுக்கு திருமண வயது 15ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், சபாநாயகர் சபாநாயகர் மஹ்மூத் அல்-மஷ்ஹதானி, “நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்கமைப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான படிதான் இந்த சட்டம்” என்று பாராட்டியுள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு மட்டும் ஈராக்கில் சுமார் 28% குழந்தைகள் திருமணத்தை நோக்கி தள்ளப்பட்டிருப்பதாக ஐநா கூறியிருக்கிறது. அந்நாட்டில் குழந்தை திருமணம் என்பது நீண்டாக சிக்கலாக இருந்து வருகிறது. குழந்தை திருமணம் என்பது, குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறையாக பார்க்கப்படுகிறது. இது மனித உரிமை மீறல் பிரச்சனையாகவும் சர்வதேச சமூகம் அணுகுகிறது. குழந்தைக்கு தன் உடல் குறித்து தெரிவதற்கு முன்னரே, அதன் மீதான அதிகாரத்தை மற்றொருவர் பறித்துக்கொள்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை? இதற்கு எதிராக ஏராளமான விழிப்புணர்வுகள் நடைபெற்றாலும் கூட, மதவாத நாடுகளிலும், வறுமை மற்றும் பழமைவாத பழக்க வழக்கங்களை கொண்டுள்ள நாடுகளிலும் இது இன்னமும் பின்பற்றப்பட்டு வருகிறது.

குழந்தை திருமணங்கள் மனித சமூகத்திற்கே எதிரானவை என்று மருத்துவர்க்ள கூறுகின்றனர். சிறுவயதில் திருமணம் செய்வதன் மூலம், குழந்தை இறப்பு என்பது அதிக அளவில் நடக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால், பாதிக்கப்படுவது திருமணம் செய்து வைக்கப்படும் சிறுமிதான். அதேபோல ஒரு நாடு வளர வேண்டும் எனில் கல்வி அறிவு ரொம்ப முக்கியம். அதுவும் இருபாலருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் குழந்தை திருமணங்கள் கல்வி அறிவை பெண்களுக்கு கிடைக்க விடாமல் செய்துவிடுகின்றன. இதனால் நாடு எவ்வளவுதான் வளர்ந்திருப்பதாக காட்டிக்கொண்டாலும், அது சமூக ரீதியாக மிகவும் பின்தங்கி இருப்பதாகவே கருதப்படும். மட்டுமல்லாது குழந்தை திருமணங்கள் நாட்டின் பொருளாதாரத்தை பின்னோக்கியே இழுத்து செல்லும் என்றும் சமூக ஆரவலர்கள் கூறுகின்றனர்.