பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கட்சியின் துணை கொறடாவாக செயல்பட்டு வந்த எம்.பி. கிறிஸ் பின்ஷர் இரவு நேர கேளிக்கை விடுதியில் 2 ஆண்களிடம் பாலியல் ரீதியாக அநாகரீகமாக செயல்பட்டதாக குற்றச் சாட்டு எழுந்தது. இதையடுத்து கிறிஸ் தனது பதவியை ராஜினமா செய்தார். கட்சியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், கிறிஸ் மீது உரிய நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி இங்கிலாந்து நிதியமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினமா செய்தனர்.
இதுகுறித்து ரிஷி சுனக் கூறியிருப்பதாவது:-
அரசு திறமையுடன் சரியாக செயல்பட வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால், நான் பதவி விலகுகிறேன். நான் பதவி விலகுவதே இங்கு கடைசியாக இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டதால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவித் அறிவித்துள்ளார். இவர்கள் இருவரின் ராஜினாமா, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கி உள்ளது.
இங்கிலாந்தில் அடுத்தடுத்து 2 அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே வேளையில் உடனடியாக புதிய அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர். இங்கிலாந்து அமைச்சரவையின் தலைமை அதிகாரி ஸ்டீவ் பார்க்லேவை சுகாதார துறை அமைச்சராக நியமித்து போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்த நதீம் சஹாவி புதிய நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக மைக்கேல் நியமனம் செய்யப்பட்டார்.