கோவிட் பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த விமான சேவையை துவக்குவதற்கு சீனா அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், இந்தியாவிற்கான விமான சேவை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை.
கோவிட் பரவல் காரணமாக, சீனாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், அங்கிருந்து சொந்த நாடுகளுக்கு திரும்பிய, மாணவர்கள், தொழில்துறை நிபுணர்கள் மீண்டும் சீனா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். சர்வதேச நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த விசா தடையை சீனா கடந்த மாதம் நீக்கியது. இந்நிலையில், சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் துவங்கி உள்ளது. இந்த வாரத்தில் மட்டும் வெளிநாடுகளுக்கு சீனாவில் இருந்து 2,025 விமானங்கள் கிளம்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், அந்நாட்டு அரசு அமைத்துள்ள முகாம்களில் 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்வதுடன், கிளம்புவதற்கு முன்னர் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து துவங்கிய நிலையில், இந்தியாவிற்கான விமான சேவை துவங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த 2020 நவம்பர் மாதம் முதல் இரு நாடுகளுக்கு இடையே முறையான விமான சேவை இல்லை. கடந்த மாதம் தான் இந்திய மாணவர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சீனா நீக்கியது. ஆனால், விமான சேவை துவங்காத காரணத்தினால் இந்தியர்கள் அங்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.