மும்பையில் புதுவை ரெயில் தடம் புரண்டு மற்றொரு ரெயிலுடன் உரசியதால் விபத்து. தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மத்திய மும்பையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.
புதுவையில் இருந்து மும்பைக்கு தாதர்-புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு மும்பை மாட்டுங்கா ரெயில் நிலையத்துக்குள் வந்து கொண்டிருந்தது. அப்போது பக்கத்து தண்டவாளத்தில் சி.எஸ்.எம்.டி.- கடக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. அப்போது அந்த ரெயில் மீது புதுவை ரெயில் உரசியது. இதில் புதுவை ரெயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டது. உடனே ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் அங்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் பீதியடைந்தனர். அவர்களை பத்திரமாக ரெயிலில் இருந்து வெளியேற்றினர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அனைத்து பயணிகளும், அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தடம் புரண்ட ரெயிலை மீட்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக மத்திய மும்பையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்ட விசாரணையில் கடக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட சிக்னல் அளிக்கப்பட்டதன் காரணமாக விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மும்பையில் உள்ள தாதர் முனையத்தில் புதுவை எக்ஸ்பிரஸ் ரெயில் பிளாட்பார்ம் 7-ல் இருந்து வந்த போது, பக்கத்து தண்டவாளத்தில் புறப்பட்ட கடக் எக்ஸ்பிரஸ் மீது ஒரு கிராசிங்கில் பக்கவாட்டில் மோதியது. இதில் புதுவை ரெயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து இறங்கி சாய்ந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய ரெயில்வே தலைமை செய்தி தொடர்பாளர் சிவாஜி கதார் கூறும்போது, “விபத்து பகுதிக்கு நிவாரண ரெயில்கள் அனுப்பப்பட்டன. பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம் ரெயில் சேவை இடை நிறுத்தப்பட்டது. அதன் பிறகு ரெயில் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது” என்றார்.