டோக்கியோ வந்து சேர்ந்தது ஷின்சோ அபேவின் உடல்: போப் ஆண்டவர் இரங்கல்!

சுட்டுக் கொல்லப்பட்ட ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உடல், நேற்று டோக்கியோ வந்தடைந்தது.

ஜப்பான் பார்லிமென்டுக்கான மேல்சபை தேர்தல் இன்று நடைபெற இருந்ததை அடுத்து, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்தார். மேற்கு ஜப்பானில் உள்ள நரா என்ற இடத்தில் பிரசாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் சென்றார். அங்குள்ள ரயில் நிலையம் அருகே, சாலையில் நின்றபடி மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது ஷின்சோ அபேவுக்கு பின்புறம் சற்று தொலைவில் நின்றிருந்த நபர், துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார். இதில் அபேவின் உடலில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் அவரது இதயம் மற்றும் நுரையீரலை செயலிழக்கச் செய்திருந்தன. இதையடுத்து, அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர். ஷின்சோ அபேவை சுட்ட டெட்சுயா யாமாகமி(41), என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஷின்சோ அபேவின் உடல், நராவில் இருந்து விமானம் வாயிலாக டோக்கியோ நகருக்கு நேற்று எடுத்து வரப்பட்டது. கறுப்பு நிற பெட்டியில் எடுத்துவரப்பட்ட உடலுடன், அவரது மனைவி ஏக்கி அபேவும் உடன் வந்தார். டோக்கியோவின் உயர்மட்ட குடியிருப்பு பகுதியான ஷிபுயா என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது.விமான நிலையத்தில் இருந்து வீடு வரை உடல் சென்றபோது, வழி நெடுகிலும் மக்கள் திரளாக நின்று அமைதியாக தலைகுனிந்தபடி தங்கள் தலைவருக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

ஷின்சோ அபேவை சுட்டுக் கொன்ற யாமாகமி, முதலில் ஒரு குறிப்பிட்ட மதத்தலைவரை கொல்ல திட்டமிட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளார். தனக்கு அந்த குறிப்பிட்ட அமைப்பின் மீது வெறுப்பு இருந்ததாகவும், அந்த அமைப்புக்கும், அபேவுக்கு தொடர்பு இருப்பதாக நம்பியதால், அவரை சுட்டதாகவும் விசாரணையில் தெரிவித்ததாக ஜப்பான் ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. மேலும், பள்ளிப் படிப்பை முடித்த பின், எதிர்காலத்தில் என்ன செய்வது என்ற குழப்பத்தில் யாமாகமி வாழ்ந்து வந்ததாகவும், 2005 வரை மூன்றாண்டுகள் கடற்படையில் பணியாற்றியதாகவும், ‘ஜப்பான் டைம்ஸ்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், கான்சாய் மாகாணத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் 2020ல் வேலைக்கு சேர்ந்து, சமீபத்தில் ராஜினாமா செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமைந்துள்ள குவாட் அமைப்பு, மறைந்த ஷின்சோ அபேக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, பிரதமர் மோடி, அதிபர் பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் ஆகியோர் நேற்று விடுத்த கூட்டறிக்கையில், “நமது ஒவ்வொரு நாட்டுடனும், ஜப்பான் உடனான உறவில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் அபே. குவாட் அமைப்பு நிறுவுவதிலும் அவர் முக்கிய பங்காற்றி உள்ளார். அமைதியான, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய எங்கள் பணியை இரட்டிப்பாக அதிகரிப்பதன் மூலம் அபேயின் நினைவை போற்றுவோம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும், அபேயின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் நேற்று பறக்கவிடப்பட்டது.

இந்நிலையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ், ஷின்ஜோ அபே படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஷின்ஜோ அபே படுகொலையை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். அபேயின் குடும்பத்துக்கும், ஜப்பான் மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முட்டாள்தனமான செயலை தொடர்ந்து, ஜப்பானிய சமூகம் அமைதி மற்றும் அகிம்சைக்கான அதன் வரலாற்று உறுதிப்பாட்டில் பலப்படுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.