தென்னாப்பிரிக்கா பாரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு: 15 பேர் பலி!

தென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல மதுபான விடுதியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவின் தலைநகர் ஜோகனஸ் பர்க்கிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சோவெட்டோ நகரம். இந்த நகரின் ஆர்லாண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ள மதுக்கூடம் (பார்) அங்கு மிகவும் பிரபலம்.
எப்போதும் மதுபிரியர்களின் வருகையால் நிரம்பி வழியும் இந்த பாரில், நேற்று முன்தினம் (ஜூலை 9) வார விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. மதுபிரியர்கள் போதை மூழ்கி திளைத்துக் கொண்டிருந்தபோது, பாருக்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இனவெறி தாக்குதல் தொடர்ந்து நடைபெறும். இதனால் இனவெறி பிரச்னை காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா என்று கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுக்கூடத்தில் நள்ளிரவில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவம் தென்னாப்பிரிக்க நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.