தருமபுரி விவசாயி குடும்பத்தினருக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி

கெயில் எரியாவு குழாய் பதிப்புக்கு எதிரான போராட்டத்தின் போது விவசாயி கணேசன் உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். மேலும், விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதல்வர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு;

தர்மபுரி மாவட்டம் பாலவாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், கரியப்பன அள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த செய்தியைக் கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் வேதனையுற்றார். மேலும், உயிரிழந்த விவசாயி கணேசன் குடும்பத்தாருக்கு, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள். கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு, என்றென்றும் விவசாயிகளுக்கு உற்ற தோழனாக இருக்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.