மதுரையில் 4 நாட்களாக நடந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு!

மதுரையில் கடந்த 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்கள், அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்டு வந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ. 165 கோடி பணம், 14 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரையை தலைமை இடமாக கொண்டு ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி ஆகிய தனியார் கட்டுமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கடந்த 4 நாட்களாக அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் உள்ளிட்ட இடங்களில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் நடைபெற்றது.

அதேபோல் கிளாட்வே சிட்டி நிறுவன பங்குதாரரான முருகனை வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர் எங்கு வைத்து விசாரிக்கப்படுகிறார், மேலும் யார், யார் வருமானவரித்துறை அதிகாரிகளின் விசாரணை வளையத்தில் உள்ளனர் என்பது குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் கேகே நகரில் உள்ள அரசு ஒப்பந்ததாரர் முருகவேலுக்கு சொந்தமான ஆர்ஆர் கட்டுமான நிறுவனத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. அரசு ஒப்பந்த பணிகளுக்கான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகள் நடந்து வருவதாகவும், பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையில் 4 நாட்களாக 20க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறையினரின் சோதனை நிறைவடைந்துள்ளது. இந்த சோதனையின் முடிவில், மதுரையில் வருமான வரித்துறை சோதனையில் ரூ.165 கோடி பணம், 14 கிலோ தங்கம், ரூ.235 கோடி ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் மதுரை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.