ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் நாளையுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நேற்று தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா பாராளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.

பிரிவு உபசார விழாவில் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:-

5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் குடியரசுத் தலைவராக பதவியேற்றேன். அனைத்து எம்பி-க்களுக்கும் என் இதயத்தில் சிறப்பான இடம் உண்டு. எனது பணிக்காலம் முழுவதும் நினைவில் இருக்கும். குடியரசுத் தலைவராக எனது பங்களிப்பை சிறப்பாக வழங்கி உள்ளேன். அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சி செய்தேன். ஜனநாயகத்தின் கோயிலாக நாடாளுமன்றம் திகழ்கிறது. நாட்டின் வளர்ச்சிக்காக மட்டுமே பாராளுமன்றத்தில் பேசவேண்டும். கொரோனா வைரஸ் சூழலை இந்தியா சிறப்பாக கையாண்டது. மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தினோம்.

அரசியல் வேறுபாடுகளை கடந்து இந்தியாவை உயர்த்த அனைவரும் பாடுபட வேண்டும். எல்லாவற்றையும் விட நாடு பெரியது என்ற உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். நாட்டுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி. நான் பணியாற்ற அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். திரவுபதி முர்மு பெண்கள் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.