இந்துக்கள், சீக்கியர்களை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அழைக்கும் தாலீபான்கள்!

ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்துள்ளதாகவும், எனவே அந்நாட்டில் இருந்து வெளியேறிய சிறுபான்மையினரான, இந்துக்கள் மற்றும் சீக்கிய மதத்தினரை நாட்டுக்கு திரும்புமாறு தலீபான்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் விலகியதையடுத்து ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றினர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆட்சி அதிகாரம் முழுமையாக தலீபான்கள் வசம் வந்தது. கடுமையான பழமைவாத சட்டங்களை தலீபான்கள் அமல்படுத்தக்கூடும் என்ற அச்சத்தில், ஆப்கானிஸ்தானில் இருந்து ஏராளமான மக்கள் வெளியேறினர்.குறிப்பாக பலர் விமானங்களில் தொங்கியபடி கூட்டம் கூட்டமாக பயணித்த காட்சிகளையும் தொலைக்காட்சி வழியாக உலக நாடுகள் பார்த்தன. எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலம் போல் தற்போதைய ஆட்சி இருக்காது என ஒருசிலர் கருதினாலும், பல சிறுபான்மையின மக்கள் , ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போது பாதுகாப்பு பிரச்சினைகள் தீர்ந்துவிட்டதால், அச்சுறுத்தல் ஏற்படும் என அஞ்சி நாட்டை விட்டு வெளியேறிய இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மை இன மக்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று தலீபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்துக்கள் மற்றும் சீக்கிய அமைப்புகளின் குழு தலைவர்களை சந்தித்த தலீபான் இணை அமைச்சக அலுவலகத்தின் பொது இயக்குனர் முல்லா அப்துல் வசி, அதன் பிறகு இத்தகைய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். குருத்வாரா மீதான தாக்குதலை தடுத்து நிறுத்திய தலீபான் அரசுக்கு சீக்கிய தலைவர்கள் நன்றி தெரிவித்ததாகவும் தலீபான் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் தலைநகரில் உள்ள சீக்கிய குருத்வாரா ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் அகமது மற்றும் சீக்கியர் என இருவர் கொல்லப்பட்டனர். குருத்வாரா மீதான இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மத தலங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என இந்தியா உள்பட பல நாடுகளும் வலியுறுத்தி இருந்தன. இதற்கு முன்பாகவும், ஆப்கானிஸ்தானில் மத சிறுபான்மையினராக உள்ள சீக்கிய சமூகத்தினரை குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காபூலின் புற நகர் பகுதியான கர்ட் இ பர்வான் மாவட்டத்தில் உள்ள குருத்வார மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடந்த 2020 ஆம் ஆண்டு இதேபோன்று குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கொடூர தாக்குதலில் 27 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ் பயங்கரவாத இயக்கமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

சிறுபான்மையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல் நடந்த நிலையில், தற்போது பாதுகாப்பு மேம்பட்டு உள்ளதால், எந்த அச்சமும் இன்றி சிறுபான்மை இன மக்கள் நாடு திரும்ப வேண்டும் என்று தலீபான்கள் அரசு கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பயங்கரவாத தாக்குதலால் சேதம் அடைந்த குருத்வாராவை மீண்டும் மறு புணரமைக்க தலீபான் அரசு முடிவு செய்துள்ளது. தாக்குதலில் காயம் அடந்தவர்கள் குடும்பத்தினரை சந்தித்து பலமுறை ஆறுதல் கூறிய தலீபான் அரசு பிரதிநிதிகள், இழப்பீடும் கொடுத்துள்ளனர். அதேபோல், குருத்வாரா மறு சீரமைப்புக்காக 7.5 மில்லியன் டாலர்கள் நிதியை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.