எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கம், இன்றுவரை நம்மிடம் தொடர்ந்து வருகிறது. இதற்கும் அறிவியல் காரணம் உண்டு, ஆன்மீக காரணமும் உண்டு. நம்முடைய உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும்.. இந்த தோலை முறையாக பாதுகாப்பது நம்முடைய கடமையாகும்.. சித்தமருத்துவத்தில், தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பது முறையாக சொல்லப்பட்டுள்ளது. தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கும்போது, சருமத்திலுள்ள அழுக்குகள் வெளியேறும்.. சருமத்துவாரங்களில் அழுக்குகள் இருந்தாலும், அதை போக்கும் தன்மை எண்ணெய் குளியலுக்கு உண்டு.. தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளித்து வருபவர்களுக்கு சருமத்தில் எந்த பிரச்சனையும் வருவதில்லை.
எண்ணெய் தேய்த்து குளித்தால், உடலிலுள்ள உஷ்ணம் தணியும்.. நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும்.. தலைமுடி வலுவாகும்.. உடல் வலி அதிகமாக இருந்தாலும், அதனை எண்ணெய் குளியல் போக்கிவிடும்.. மூட்டு வலி, முழங்கால் வலி இருப்பவர்களுக்கும், எண்ணெய் குளியல் கை கொடுத்து உதவும். வேனல் கட்டி, கொப்புளங்கள், வேர்க்குரு போன்ற பிரச்சனைகளிலுந்தும் தீர்வு கிடைக்கும். எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் தோலில் பளபளப்பும் கிடைக்கிறது.. அதிலும் வறண்ட தோல் உள்ளவர்கள், கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.. உடல் சூடு உள்ளவர்களும் எண்ணெய் தேய்த்துக்குளிப்பதால் உடல் குளிர்ச்சியாகும். அதுவும், காலையில் எண்ணெய் தேய்ப்பதே சிறந்தது. காரணம், சூரியனிலிருந்து வரும் வைட்டமின் D சத்துக்கள் நமக்கு மிகவும் நல்லது..
ஆன்மீக ரீதியாக பார்த்தால், எந்தெந்த கிழமைகளில் குளிக்க வேண்டும் என்று வகைப்படுத்தி, அதற்கான நேரமும் குறிக்கப்பட்டுள்ளது.. அதாவது, ஆண்கள் புதன், சனி கிழமைகளில் குளிக்க வேண்டுமாம்.. காரணம், சனி பகவான் அசதி, சோம்பேறித்தனம் நிறைந்த தமோ குணத்தின் அதிபதி. அதனால், எண்ணெய் குளியல் மனிதர்களுக்கு அவசியம் என்கிறார்கள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். சனியை விட சுக்ரனின் உதவி அதிகம் தேவை.. அத்துடன், செவ்வாயும், வெள்ளியும் பெண்களுக்கு உகந்த கிரகங்களின் நாட்கள் என்பதால், இந்த நாட்களில் கட்டாயம் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அதன்படி எண்ணெய் குளியல் என்றாலே, காலை 8 மணிக்கு முன்பு, அல்லது மாலை 5 மணிக்கு பிறகு எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். புதன், சனிக்கிழமையில் குளிப்பதையே வழக்கப்படுத்தி கொள்ள வேண்டுமாம். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் செல்வமெல்லாம் போய்விடும் என்பார்கள்.
குடும்ப உறவுகளுக்கும், எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கும்கூட நிறைய தொடர்பு இருக்கிறதாம்.. தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டிருக்கும்போது, விளக்கேற்றி வழிபாட்டில் ஈடுபடக்கூடாது.. அதேபோல, குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது. பெண்கள், தலையில் எண்ணெய் வைத்துவிட்டால் உடனே தலைமுடியை முடிந்து கொள்ள வேண்டும். தலைவிரி கோலமாக வீட்டில் நடமாட கூடாது.. அதேபோல பெண்கள் எண்ணெய் வைத்து தலைவிரி கோலத்தில் இருந்தால், வீட்டை விட்டு யாரும் வெளியே பயணிக்க கூடாது.
விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் இந்த 3 எண்ணெய்களையும் சமமாக கலந்து தலைமுதல் கால் வரை ஊறவைத்து குளிக்கலாம்.. எண்ணெய் வைத்து குளிக்கும்போது, நம்மை பிடித்த தோஷங்களும் விலகும் என்பார்கள்.. அதேபோல, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டால் அன்றைய தினம் வெளியில் அவ்வளவாக அலையக்கூடாதாம்.. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், இன்னும் சூடு சேர்ந்து உடல்நல தொந்தரவை தந்துவிடுமாம்.