நா(வாய்) காக்க – பி. பாலாஜி கண்ணன்

மனித உடலின் ஆரோக்கியத்தை சித்த மருத்துவம் கண், காது, மூக்கு, நா (வாய்), மெய் (தோல்), மலம், சிறுநீர், சுக்கிலம் (ஆண்), சுரோணிதம் (பெண்களுக்கு) ஆகிய எண்வகைத் தேர்வின் மூலம் கணிக்கிறது. இன்றைக்கும், எவ்வளவு பெரிய மருத்துவராயினும், நோயாளியின் குறைகளைக் கேட்டுவிட்டு, முதல் பரிசோதிப்பது வாயைத்தான்.

வாயினுள் அடங்கியுள்ள நாவின் நிறம், பற்களின், ஈறுகளின் ஆரோக்கியம், உமிழ்நீரின் தன்மை, சுரக்கும் அளவு, வாய்ப்புண், வாய்த் துர்நாற்றம் முதலியவற்றைக் கொண்டு ரத்தசோகை முதல் புற்றுநோய் வரை மருத்துவர்கள் நோய்களைக் கணிக்கிறார்கள்.

மனித உடலின் செயல்பாடுகளுக்கு இன்றியமையாதது உணவு. அவ்வுணவை நாம் விரும்பும் வண்ணம் செய்வது சுவை. அச்சுவையை நமக்கு உணர்த்துவது நாவிலுள்ள சுவை மொட்டுகளே ஆகும். மேலும், அவ்வுணவானது நன்கு சீரணமாக, அவற்றை நன்றாக அரைக்கும் பற்கள், உணவின் செரிமானத்தை ஆரம்பித்து வைக்கும் உமிழ்நீர் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ள வாயின் ஆரோக்கியமே உணவின் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியம் ஆகும்.

உணவுச் செரிமான மண்டலத்தின் செயல்பாடுகள் ஆரோக்கியமாக இருக்கும் போது தான் உண்ட உணவின் சாரமானது (சத்தானது) உடலில் உள்ள திசுக்களால் முழுமையாகக் கிரகிக்கப்பட்டு, உடல் உறுப்புகள் தகுந்த சக்தியைப் பெறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், இன்றைய நவீன, அவசர வாழ்க்கையில் நாவும், வாயும் நம்மிடம் மாட்டிக் கொண்டு மிகுந்த அவஸ்தைப்படுகின்றன. உலகிலேயே இந்தியாவில் தான் வாய்ப்புற்றுநோய் அதிகமாகக் காணப்படுகின்றன. நாவிலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

இவற்றுக்கு முக்கியக் காரணம், நம் மக்களிடையே காணப்படும் புகையிலை உபயோகம் தான். புகையிலையை அப்படியே சுவைத்தல்; சிகரெட், பீடி, பான்மசாலா உபயோகித்தல்; எப்போதும் அதிகச் சூடாகவே உணவருந்துதல்; சூடான பானங்கள் குடித்தல்; செயற்கை நிறங்கள் மற்றும் சுவைக்காக செயற்கை ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட துரித உணவு வகைகள்; சுவைக்காகப் பதத்தை மீறி வறுத்து செய்யப்படும் மிகு கார, மசாலா, அசைவ உணவு வகைகள்; அகால உணவு போன்ற ஒழுங்கற்ற உணவு முறைகள் வாய்ப்புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.

நார்ச்சத்து நிறைந்த காய்கறி, கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அந்தந்தக் காலகட்டங்களில் கிடைக்கும் காய்கறி, பழங்களை அதிகமாகவே உபயோகிக்க வேண்டும்.

உணவுமுறையில் சீரான ஒழுங்கினைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில், சரியான கால இடைவெளியில் உடலுக்கு ஒத்துக்கொள்ளக்கூடிய உணவு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

உடல் இயக்க மாறுபாடுகளைச் சீர்செய்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடிய திரிதோட சமனப் பொருள்களான மஞ்சள், சீரகம், வெந்தயம் போன்றவற்றை, சரியான விகிதத்தில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கரிசாலை, கீழாநெல்லி, கடுக்காய் போன்ற கற்ப மூலிகைகளின் மூலம் செரிமான மண்டலத்தின் சுரப்புகளைச் சீர்செய்து புற்றுநோய் உண்டாகக்கூடிய வாய்ப்புகளை குறைக்கலாம்.

வாரத்துக்கு ஒரு முறை திரவ உணவுகளான பாசிப்பருப்புக் கஞ்சி, அரிசிக் கஞ்சி, நீர்மோர், பழரசம் போன்றவற்றை மட்டும் அருந்துவதால் செரிமான மண்டல உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. அந்த ஓய்வில் அவை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கின்றன.

மேலும், வழிவழியாக வரும் நமது இந்தியக் கலாசார உணவுமுறைகளைக் கைக்கொள்வதன் மூலமும் வாய்ப்புற்றுநோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.