தொலைவில் வைப்போம் : டி.வி. மற்றும் தொலைபேசியின் தாக்கத்தை

அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலது மூளை, இடது மூளையை விட அதிகம் பணிபுரிந்து ஒரு நிலையற்ற சலன மனம் உள்ள மனிதரை உருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனை டி.வி. குறைக்கிறது.

உணவு, உடை, உறைவிடம் இவற்றைப் போல் தொலைக்காட்சியும் நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. இன்றைய இயந்திர வாழ்க்கையில், தொலைக்காட்சியே நடுத்தர, கிராமப்புற, நகர்ப்புற மக்களின் வருமானத்திற்கேற்ற பொழுதுபோக்கு அம்சமாக விளங்குகிறது.

உலகே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இன்றையச் சூழ்நிலையில் எந்த நாட்டில் இருந்தாலும் எந்த மொழி பேசினாலும் தன் சொந்த மொழியில் உள்ள நிகழ்ச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பை வெளிநாட்டில் வாழும் மக்களுக்கு வழங்கியுள்ளது செயற்கைக் கோள் தொலைக்காட்சி. இசை, நடனம், கல்வி, சொல்லாற்றல், கவிதை இவற்றில் தனித்தன்மை கொண்ட பல மாணவர்களுக்காக பல நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களைத் தொலைக்காட்சி ஊக்கப் படுத்துகிறது.

தொலைபேசியின் மூலம் பல கல்வியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்களின் கருத்துகளை நேயர்கள் நேரடியாகக் கேட்டுப் பயன்பெற முடிகிறது.

இப்படி பல நன்மைகளைத் தொலைக்காட்சி ஏற்படுத்தினாலும் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தொலைக்காட்சி பல விருப்பந்தகாத பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

முன்பெல்லாம் எந்தத் தெருவிற்குச் சென்றாலும் கூட்டம் கூட்டமாகக் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் . இப்பொழுது இது ஓர் அரிய நிகழ்ச்சியாகி விட்டது. பள்ளியிலிருந்து வரும் குழந்தைகள் பல மணிநேரம் உட்கார்ந்து வீட்டுப்பாடம் செய்ய வேண்டியுள்ளது. பின் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஒரு நாளின் எஞ்சிய நேரத்தையும் கழித்து விடுகிறார்கள். குழந்தைகளின் உடலும் மனமும் இதனால் சோர்வடைகின்றன.

ஏதாவது ஒரு மெகா சீரியல் நடந்து கொண்டிருக்கும் போது தொலைபேசி மணி ஒலித்தாலோ அல்லது யாராவது வந்தாலோ முழு மனத்தோடு அவர்களுடன் உரையாட முடிவதில்லை. இதன் விளைவாக நண்பர்கள், உறவினர்கள் என்று எவரும் அடிக்கடி பார்த்து, பேசி, பழகும் களிப்பை ஒதுக்கி வருகிறோம். வெளியில் வேலை முடிந்ததும் “தன் பெண்டு, தன்பிள்ளை, சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு, தன் வீட்டுத் தொலைக்காட்சி உண்டு” என்று வாழ்க்கை முறையே மாறி விட்டது. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் சமூகத்தில் ஒவ்வொருவரும் தனித்துப் போக வேண்டிய சூழ்நிலை ஏற்படும். விளைவு விரக்தியும் மனச்சோர்வும் தான். அய்யோ என்ற அலறல் கேட்டால் அடுத்த வீட்டுக்காரர்கள் ஓடி வரும் நாகரிகம் குறைந்து கொண்டே போவதற்கு, தொலைக்காட்சியும் ஒரு காரணம்.

இவை மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதிக நேரம் தொலைக்காட்சி பார்த்தால் கண் பார்வை கெட்டு விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை தான்.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் பாலியல் மற்றும் வன்முறை சம்பந்தப் பட்ட காட்சிகள், நம்முடைய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில் பல சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது. இவை தவிர எண்ணிப் பார்க்க முடியாத பல பாதிப்புகளையும் தொலைக்காட்சி ஏற்படுத்துகிறது.

தொலைக்காட்சி பார்ப்பது குழந்தைகளின் மூளையைப் பெரிதும் பாதிக்கிறது என்ற மருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.” தொலைக்காட்சித் திரையிலிருந்து வெளி வரும் கதிர் வீச்சு, 13 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மேல் அபாயகரமான விளைவை ஏற்படுத்துகிறது. டி.வி. பார்ப்பது குழந்தைகளின் மூளைக்குத் தீர்க்க முடியாத பாதிப்பை ஏற்படுத்துகிறது” என்று மத்திய நடத்தை அறிவியல் நிறுவனத்தின் (Central Institute of Behavioural Sciences) இயக்குநரும், குழந்தை மனநல மருத்துவருமான டாக்டர் சைலேஸ்பகோங்கர் கூறுகிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ” மாந்தன் ” என்ற பெயரில், குழந்தைகள் மத்தியில் இந்நிறுவனம் நடத்தி வந்த ஆய்வு, டி.வி.யிலிருந்து வெளிவரும் கதிர்கள் மூளையின் பகுதிகளில் சேதம் ஏற்படுத்துகின்றன என்று நிரூபித்துள்ளது. இந்த ஆய்வு சம்பந்தமான தனிப்பட்ட சோதனைகளும் ” டி.வி. பார்க்கும் போது அபாயமான புதிய வேதிப் பொருள்கள் குழந்தைகளின் மூளையில் உருவாகின்றன” என்று கண்டறிந்துள்ளன. ” அதிகமாக டி.வி. பார்ப்பதால் குழந்தைகளின் வலது மூளை, இடது மூளையை விட அதிகம் பணிபுரிந்து ஒரு நிலையற்ற சலன மனம் உள்ள மனிதரை உருவாக்கும். குழந்தைகளின் கவனிக்கும் திறனை டி.வி. குறைக்கிறது. இது மட்டுமல்லாமல் அவர்களுடைய சகிப்புத் தன்மையையும் குறைத்து, விரக்திக்குச் சாதகமான மனநிலையை அவர்களிடம் உருவாக்குகிறது. அவர்களுடைய நினைவுத் திறன், உணர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் ஆய்வுத் திறனையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கிறது” என்று டாக்டர் பகோங்கர் கூறுகிறார்.

சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வின் படி, தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்ப்பது குழந்தைகளிடம் ஒரு மெய் மறந்த நிலையை உருவாக்கும் என்றும் மூளையின் மேற் பகுதியில் உள்ள சக்தி வாய்ந்த பகுதிகளில் உள்ள கவனத்தை மூளையின் கீழ்ப் பகுதிக்கு மாற்றி இழிந்த உணர்ச்சிகளுக்கு இடம் தேடிக் கொடுக்கும் என்றும் கண்டறிந்துள்ளனர். மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் இத்தகைய மாற்றம் அபின் போன்ற போதை உணர்வை உடலில் இயற்கையாகத் தோற்றுவிக்கிறது. இந்தப் பாதிப்பிற்கு சிகிச்சையே கிடையாது என்பது தான் மிகவும் அச்சமளிக்கும் விஷயமாகும். இதனைத் தடுக்கலாமே யொழிய குணப்படுத்த இயலாது.

மூளை மட்டுமல்லாமல் உயர் ரத்த அழுத்தம், அதிக அளவிலான கொலஸ்ட்ரால் போன்ற நோய்களினால் உடலும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகள் கீழ்ப்படியும் தன்மையை அறவே மறந்து விடுகிறார்கள்.
சரி, இவற்றுக்குத் தீர்வு தான் என்ன? டி.வி. யை முழுமையாகத் தவிர்க்க முடியுமா என்ற கேள்விகள் மனத்தில் எழலாம். முழுமையாகத் முடியா விட்டாலும் டி.வி. பார்க்கும் நேரத்தின் அளவை நம் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும். வருமுன் காப்பது நல்லது.

குழந்தைகளுக்குப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது தான் இதற்கு ஒரே வழி என்று மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று மணி நேரமாவது குழந்தைகள் படித்தால் தான் இக்குறையை ஓரளவிற்குக் கட்டுப் படுத்தலாம். பாடப் புத்தகத்தைத் தவிர, குழந்தைகளுக்கான கதைகள், துணுக்குகள், வண்ணம் தீட்டுதல் போன்ற பொழுது போக்கின் மூலம் அறிவை வளர்க்கும் புத்தகங்களை வாங்கித் தர வேண்டும். குழந்தைகளுக்கு கற்றலின் இனிமையைப் புரிய வைக்க வேண்டும்.

பள்ளிகள் மற்றும் சமூக நிறுவனங்கள் மூலம் இது தொடர்பான விழிப்புணர்வைப் பெற்றோர்களிடம் ஏற்படுத்த வேண்டும். டி.வி. க்கு ” முட்டாள்களின் பெட்டி” என்ற பெயரும் உண்டு. இப்போது அப்பெட்டி எதிர்காலச் சமுதாயத்தையே முட்டாளாக்கும் பெட்டியாக உள்ளது. டி.வி. யைத் தவிர்த்து ” அறிவை விரிவு செய்; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று நம் வீட்டுச் சிறார்களை உற்சாகப் படுத்தி உணர வைப்போம் !