ஆயுள் காக்க ஐம்புலன்கள் காக்க

கண், காது, மூக்கு, வாய் (நாக்கு), மெய் (தோல்) ஆகிய ஐம்புலன்களுக்கும் உடல் நலனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எனவே இவற்றுக்குத் தீமை வராமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கல்வி உள்பட வாழ்க்கையில் மேன்மை அடைவதில் எவ்விதத் தடையும் இருக்காது.

விண்ணில் பறந்து கொண்டிருக்கும் போதே 1000 அடி கீழே உள்ள கோழிக் குஞ்சைப் பார்த்து “லபக்” கென்று கால்களால் கவ்வும் திறன் படைத்தவை கழுகுகள். இயற்கையிலேயே கழுகுக்கு கண்கள் வரப்பிரசாதம். இதே போன்று இயற்கையிலேயே அனைத்துத் திறனுடன் கிடைத்த கண்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஒருவரின் காது கேட்கும் திறனைப் பாராட்ட நம் முன்னோர்கள் “பாம்புச் செவி” என்பார்கள். உண்மையில் பாம்புக்குச் செவி கிடையாது. ஆனால் அதன் உடல் முழுவதும் உள்ள செதில்கள், அதிர்வுகளை உணரும் தன்மையைக் கொண்டுள்ளன. இன்றைய தகவல் யுகத்தில் பாம்பைப் போல் அதிர்வுகளைக் கூட உணர்ந்தால் நிறைய சாதிக்க முடியும்.

கிளியின் சிவப்பு மூக்கு மிகவும் அழகானது. நம் மூக்கின் முக்கிய வேலை சுவாசம். முகத்துக்கு அழகு சேர்ப்பது மூக்கு. எனவே மூக்கைப் பாதுகாக்கா விட்டால் அழகு குறையும். தன்னம்பிக்கையில் ஊனம் ஏற்படும்.
ஒரு மரத்தில் 100 மாம்பழங்கள் இருந்தாலும் எல்லாவற்றையும் அணில் கடித்துத் தின்பதில்லை. ஒரு சில பழங்களை மட்டுமே அது தேர்ந்தெடுத்துக் கடித்துச் சாப்பிடும். அணில் கடித்த பழம் மிகவும் சுவையாக இருக்கும். மனிதர்களின் ஜீரண மண்டலத்துக்கும் நாக்குக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. அணில் போன்று ருசி பார்த்துச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறந்து விடக்கூடாது.
மானின் தோல் மிருதுவானது. சுறுசுறுப்போடு சாந்தமான முகம் உடைய மான், வீண் வம்புக்குச் செல்லாது. உடல் உள் உறுப்புகளின் கேடயமாக விளங்கும் நமது தோலின் மிருதுத் தன்மையை மானைப் போலக் காப்பது அவசியம்.

கண்

“என்ன விலை அழகே” என்ற பாடல் காட்சியை நான் இல்லைன்னா நீங்க பார்த்து ரசிக்க முடியாதுங்க. உங்க தாத்தா, பாட்டி காலத்துல எல்லாம் எனக்கு வேலை குறைவா இருந்திச்சு; அதாங்க, அப்பெல்லாம் தூரத்துல்ல உள்ள பொருள்களைத் தான் எல்லாரும் அதிகமாகப் பார்த்தாங்க. இப்ப கம்ப்யூட்டர் யுகமுங்க. கம்ப்யூட்டர், எழுதறது, படிக்கிறதுன்னு கிட்ட கிட்ட பார்த்து வேலை செஞ்சு எனக்கு “ஒர்க் லோட்” அதிகமாகிப் போச்சுங்க.
எனக்கு அதிக வெளிச்சம் ஆகாதுங்க, என்னை மூடிக்கிட்டு நீங்க சிந்திச்சிங்கன்னா, எனக்கு அப்பப்ப ரெஸ்ட் கிடைக்கும்ங்க. வானத்துல ஓசோன் மண்டலத்துல ஓட்டை விழுந்துட்டதுன்னால சூரியன் இப்ப அதிகமா தினமும் உக்கிரத்துடன் பூமிக்கு வந்துக்கிட்டே இருக்காரு. அவர் பூமிக்கு வர்றதால தப்பில்லீங்க. அவரோட புற ஊதாக் கதிர் என் லென்ஸீக்கும் ரெட்டினாவுக்கும் (விழித் திரை) ஆகாதுங்க. சீக்கிரம் லென்ஸ்ல புரை வந்து ஆபரேஷன் செய்துக்க வேண்டிருக்குங்க. அதனால் தாங்க “கூலிங் கிளாஸ் போட்டுக் காம பைக் ஓட்டாதீங்கன்னு” ஸ்டெதஸ்கோப் காரங்க சொல்றாங்க.

உங்க வீட்டு கூர்க்கா கூட சமயத்தில் தூங்கிடுவாருங்க. ஆனா என்னோட கூர்க்காவான இமை துடித்துக் கொண்டே இருப்பாருங்க. ஒரு நிமிஷத்துக்கு மூன்று முதல் ஆறு தடவை அவர் துடிக்கலைன்னா என் பாடு ரொம்ப திண்டாட்டமுங்க. அவங்க துடிக்கலைன்னா லென்ஸோட ஈரத் தன்மை அவுட்டுங்க.
இப்ப எல்லாம் ஒன் டே கிரிக்கெட் மேட்ச் ரொம்ப த்ரில்லா ஆயிட்டுதுங்க. கடைசில, மேட்ச் என்ன ஆகும்னு இமை கொட்டாம பார்க்காதீங்க. கொஞ்சம் இமையைத் துடிக்க விட்டு, தூரத்துல நின்னு கை தட்டி ஜெயிச்சத கொண்டாடுங்க.

எனக்குப் பின்னாடி உள்ள ஸ்ட்ரா மாதிரி இருக்கிற பார்வை நரம்பு மூலம் மூளைக்குச் செய்தி செல்லும் வேகம் வேணுமாங்க? அழகான ஒருவரை நீங்க பாத்த உடனேயே, 0.002 நொடில அவரோட உயரம், நிறம், வயது எனப் “பல செய்திகள்” மூளைக்குப் போய்டுங்க.

என்னோட தசை உங்களுக்காக உழைப்பதை நீங்க நினைச்சு கூடப் பார்க்க முடியாதுங்க. நாள் முழுக்க எல்லாத்தையும் ஃபோக்கஸ் செய்ய என்னோட தசைங்க ஒரு லட்சம் தடவை அசையுதுங்க. இது போல கால் தசைக்குப் பயிற்சி வேணும்னா 75 கிலோ மீட்டர் நடக்கனும்னா பார்த்துக்குங்க.
ஒன்னே ஒன்னு சொல்லி முடிக்கிறங்க. வாழும்போதே என்னைத் தானம் செய்யறதா எழுதி வச்சுடுங்க. ஏன்னா, நீங்க பூமிக்குள்ள போனாலும் உங்க மூலமா நான் இரண்டு பேருக்கு பார்வை கொடுப்பேங்க.

காது

கண்ணுக்குத் தர முக்கியத்துவத்தில் பாதி கூட எனக்குப் பல பேர் தரதில்லீங்க. குழந்தை பிறந்த உடனே நான் வேலை பண்ணலேன்னா நீங்க மழலைச் சொல்லைக் கேட்டு ரசிக்க முடியாதுங்க. கேட்க கேட்கத் தாங்க பேச்சு வரும். புள்ளை பெத்து தாய்ப் பால் கொடுக்கிற அம்மணிகளுக்கு ஒரு முக்கியமான விஷயமுங்க. எனக்கும் தொண்டைக்கும் கனெக்ஷன் உண்டுங்க. என்ன தான் உடம்பு முடியலன்னாலும் சரி, சிசேரியனா இருந்தாலும் சரி குழந்தைக்குப் படுத்துக் கிட்டு பால் கொடுக்காதீங்க. ஏன்னா அப்படி பால் கொடுத்தீங்கன்னா சீழ் பிரச்சினை வரலாமுங்க. வலிச்சா குழந்தைக்குச் சொல்லத் தெரியாதுங்க. கைய அடிக்கடி காது கிட்ட கொண்டு போகுமுங்க.
அடுத்து செலஃபன் பேப்பர் போன்ற எனது டிரம்ம (செவிப் பறை) தெரிஞ்சுக்குங்க. வெளியிலிருந்து வர ஓசையெல்லாம் இங்க தாங்க முதலில் வந்து குவியுது. விடாம சீழ் வந்தா டிரம் ஓட்டையாயிடும் பார்த்துக்குங்க. டிரம் ஓட்டையானா எந்த ஓசையும் கேட்காதுங்கிறதை மறந்துடாதீங்க.

எங்கிட்ட அழுக்குச் சேர்ந்தா, தானே சுத்தமாயிடுங்க. சுத்தம் பண்றதுக்குன்னே எங்கிட்ட 4000 சுரப்பிகள் இருக்குங்க. ஹேர் பின், தீக்குச்சி, குரும்பி, பென்சில்ன்னு கையில கிடைக்கிறதெல்லாம் விடாதீங்க. பஞ்சு குச்சி கூட வேண்டாங்க. இதெல்லாம் டிரம்ம பஞ்சர் ஆக்கிடுங்க. அழுக்கு எடுக்கிற வேலைய ஸ்டெதஸ்கோப்காரங்க கிட்ட விட்டுடுங்க.

என்னை எப்போதும் தண்ணீ இல்லாம டிரையா வச்சுக்குங்க. பிரச்சினை இருந்து தலைக்குக் குளிக்கிறவங்க பஞ்சுல தேங்காய் எண்ணெய் தோச்சு வச்சுக்குங்க. எண்ணெய் தோச்சு பக்கம் வெளிப்புறம் இருக்கனும்ங்க. அப்ப தான் என்னோட உள் உறுப்புகளுக்குள்ள தண்ணீ போகாதுங்க.

நீங்க தலை சுற்றி கீழே விழாம நேரா நடக்கறதுக்கு, நிக்கறதுக்கு நான் தாங்க டியூட்டி ஆபீசர். பாலன்ஸ் பராமரிக்கிற அற்புதமான சமாசாரம் என் உள்ளுக்குள்ள (நடுக்காதைத் தாண்டி) இருக்குங்க. அதுல ஓடுற திரவம் மாறிப் போச்சுன்னா, ” தண்ணீ ” போடாமலேயே நீங்க தள்ளாட ஆரம்பிச்சுடுவீங்க.

ஓசை மூலம் பேச்சுங்கிறதனால எனக்கும் மூளைக்கும் கனெக்ஷன் உண்டுங்க. பிரச்சினை வர்றப்ப ஆரம்பத்திலேயே என்னைக் கண்டுக்காம விட்டீங்கன்னா, மூளைக்கும் ஆபத்து வந்து நிழல் படமாயிடுவீங்க. அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனமில்லீங்க. இதனால தாங்க என்னை, செல்வத்துள் செல்வம்ன்னு “அய்யன்” சொல்லிருக்காரு.

மூக்கு

என்ன எப்போதும் தொல்லை தர உறுப்பா பார்க்கிறதே எல்லாருக்கும் வழக்கமாப் போச்சு. அதாங்க , கூட்டணி சேர்க்கிற ஜலதோஷம் வந்தாலே என்னைச் சபிக்காதவங்க கிடையாதுங்க. ஆனா, நான் எவ்வளவு நல்ல வேலை செய்யறேன்னு யாருக்கும் தெரியாதுங்க.

ராத்திரிலே தூக்கத்துல ஒரே பக்கமா படுக்காம புரண்டு புரண்டு நீங்க ஏன் படுக்கிறீங்க தெரியுமா? உதாரணமா ஒரு ஆசாமி இடப் பக்கமா படுத்துத் தூங்க ஆரம்பிக்கிறார்ன்னு வச்சுக்குவோம் ; கொஞ்ச நேரத்துல அந்த ஆசாமி தன்னாலே வலது பக்கம் புரண்டு படுப்பாரு. இடப்பக்க மூக்கு அடைபடாம இருக்க, தூங்கற ஆகாமிய எழுப்பாம தன்னிச்சையா நான் செய்யற நல்லதுங்க இது.

இலையில நீங்க உட்கார்ந்த உடனேயே சாப்பிடலாமா, வேண்டாமான்னு சின்ன மோப்பம் பிடிச்சு நாக்கையும் வயத்தையும் நான் தாங்க தூண்டறேன். இதனால் தாங்க ஜலதோஷம் பிடிச்சா உங்களால சரியா சாப்பிட முடியறதில்ல. 4000 வகை சென்ட் வாசனையை ரொம்ப கரெக்ட்டா துப்பறியும் திறமை எனக்கு உண்டுங்க.
நீங்க கல கலன்னு பேசறதுக்கு நான் உள்ளே அனுப்பற காத்துதாங்க காரணம். சந்தேகமா இருந்தா, கொஞ்சம் மூக்கை மூடிக் கொண்டு பேசிப் பாருங்க. எல்லாரும் ஓடிடுவாங்க.

நுரையீரலுக்கு போற காற்ற ஃபில்ட்டர் பண்ணி, கொஞ்சம் சூடு படுத்தி அனுப்பறது என்னோட முக்கியமான வேலைங்க. சுத்தமான காற்று எனக்கு ரொம்பப் பிடிக்குமுங்க. ஆனால் எல்லாம் தெரிஞ்ச மனுஷங்க கூட எனக்கு கெடுதல் பண்ணனும்னு புகை விடறாங்க. இது போல வாகனங்கள் விடுற புகை கூட எனக்கும் என் அண்ணன் நுரையீரலுக்கும் ஆகாதுங்க.

என் கிட்ட உள்ள இரண்டு துளைப் பாதை முழுவதும் சளிப் படலம் இருக்குங்க. “அன்னிய நாட்டுக்காரங்க” (பாக்டீரியா) யாராவது நுழைந்த உடனேயே இவங்க தான் அவங்கள சுட்டுத் தள்ளுவாங்க. “ஹச்” – ன்னு தும்மல் போடறீங்களே. அதாங்க, என்ன மீறி உள்ளே போற வெளி நாட்டுக்காரங்கள பெரிய அண்ணன் (வயிறு) தனது அமிலம் மூலம் கொன்னு போட்டுருவாருங்க.

“காது – மூக்கு – தொண்டை நிபுணர்ன்னு” ஸ்டெதஸ்கோப்காரங்க சொல்றதிலிருந்தே எங்களோட உறவை நீங்க புரிஞ்சுக்கிட்டிருப்பீங்க. இதுல நான் தாங்க வி.ஐ.பி. ஏன்னா, எடுத்த உடனே தொந்தரவு ஆரம்பிக்கிற மாதிரி பகிரங்கமா வெளியில தெரியற உறுப்பா நான் இருக்கேங்க. அதனால வி.ஐ.பி. க்கு உரிய மரியாதைய நீங்க எனக்கு கொடுத்திட்டீங்கன்னா நீங்க பாட்டுக்கு வேலை செய்யலாமுங்க.

வாய் (நாக்கு)

தலைப்பைப் பார்த்த உடனே , “அம்மா” வுக்காக (தமிழ் நாட்டுக்கு ஒரே “அம்மா” தாங்க) நாக்கை அறுத்துக்கிட்டவர் கதை உங்களுக்கு ஞாபகம் வரக்கூடாதுங்க. நான் இல்லைன்னா உங்களால ஸ்பஷ்டமா பேச முடியாதுங்க.
என்னோட முனை மூலமா உப்பையும், நடுப் பகுதி மூலமா இனிப்பையும், பின்புறம் மூலமா கசப்பையும், ஓரம் மூலமா புளிப்பையும் உங்க மூளைக்குச் சொல்றேங்க.

எங்கிட்ட சுவை அரும்புகள் இருக்குங்க. நீங்க ரொம்ப சூடா சாப்பிட்டாலும் ரொம்ப ஜில்லிப்பா சாப்பிட்டாலும் நான் அட்ஜஸ்ட் செய்துக்குவேங்க. ஆனால் ரொம்ப சூடோ, ரொம்ப ஜில்லிப்போ பெரிய அண்ணன் வயித்துக்கு ஆகாதுங்க. ஏன்னா, வயித்துல புண் இருந்தா இதனால ஜாஸ்தியாயிடுமுங்க.

உங்களுக்கு வயசு ஆக ஆக என்னோட சுவை அரும்போட எண்ணிக்கை குறைஞ்சு போய்டுமுங்க. சுவையைக் கட்டுப் படுத்தும் மூளை நரம்பும் தளர்ந்து போய்டுமுங்க இதனால பொக்கை வாய் காலத்துல தாகம் இருக்காதுங்க. இத மனசுல வாங்கிக்கிட்டு தாகம் எடுக்காமலேயே, நீங்க தண்ணீ குடிச்சீங்கன்னா கொள்ளுப் பேரன் – பேத்தி மழலை யெல்லாம் கேட்க உசிரு மிஞ்சுமுங்க.

நோய் வந்தா நான் ஒரு கண்ணாடிங்க. டைஃபாய்டு ஆகட்டும், மஞ்சள் காமாலையாகட்டும் — ஸ்டெதஸ்கோப் காரங்க முதல்ல பார்க்கறது என்னைத் தாங்க. ரொம்ப போர் அடிச்சுட்டேனா, நாவடக்கம் மேன்மை தரும்ன்னு அப்ப சொன்னாங்க… சாப்பாட்டுக்கும் அது இப்ப பொருந்துதுங்க.

மெய் (தோல்)

உடம்புக்கு ஒத்துக்காத பொருள் பத்தி உடனே அலாரம் (அரிப்பு, தடிப்பு) அடிக்கிறது நான் தாங்க. உடம்புக்குள்ளே எல்லாம் பத்திரமா இருக்கறதுக்கு நான் தாங்க காரணம். சூரிய ஒளிலேர்ந்து வைட்டமின் டி, நீங்க ஜாலி மூடில் இருக்க செக்ஸ் ஹார்மோன் உற்பத்தி பண்ற ஃபாக்டரி நான் தாங்க. எனக்குத் தண்ணீய சேத்து வச்சுக்கற சக்தியும் உண்டு ; வெளியேத்தற சக்தியும் உண்டுங்க. இது இல்லாட்டி நீங்க நீச்சல் குளத்துல மணிக்கணக்கில் ஆட்டம் போட முடியாது. கத்தரி வெயில்லேயும் அலைய முடியாதுங்க.

பாம்பு எப்படி அப்பப்ப தோல் உரிச்சுக்குதோ அதே போலத்தான் நானும், லட்சக்கணக்கான செல்களை உதிர்த்து உங்களுக்காக 27 நாளைக்கு ஒரு முறை என்னைப் புதுப்பிச்சுக்கிறேன். எனக்கு அடில உள்ள வியர்வைச் சுரப்பி தாங்க உங்க உடம்பு அழுக்கயெல்லாம் வெளியேத்தது; உடம்போட நீர் இழப்பை ஈடு கட்டுது.

நீங்க கோபப்பட்டா முகம் ஏன் சிவக்குதுன்னு தெரியுமாங்க? நான் தாங்க முகத்தில உள்ள ரத்தக் குழாய திறந்து விடறேன். இப்படி தாங்க நீங்க பயப் படறப்ப, ரத்தக் குழாயை மூடறதால உள்ளங்கை ஜில்லிட்டுப் போகுதுங்க.
என்ன நீங்க நல்லா வச்சுக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டாமுங்க. வேம்பு போன்ற மூலிகை கலந்த சோப்பு போட்டு தினமும் குளிச்சுடுங்க. சூரியனாரின் பார்வை அதிகமா என் மீது படாம பார்த்துக்குங்க; அலையறது தான் பொழப்புன்னா, என்ன செய்யறதுன்னு கேட்கிறீங்களா; கையில குடை வச்சுக்குங்க; தலைக்குக் குல்லாவும் குளு குளு கண்ணாடியும் போட்டுக்குங்க. நீங்க இப்படி செஞ்சீங்கன்னா ஆயுள் முழுக்க உங்களுக்கு “தோள்” கொடுப்பேனுங்க.