புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி செய்தி ஊடகங்கள் மூலமாக விரிவாகவே சொல்லப்பட்டு வருகின்றன. ஆனாலும் புகைப்பிடிக்கும் பழக்கம் குறைந்த பாடில்லை. புகைப் பிடிப்பதால் புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அந்த புகையை சுவாசிக்கும் அப்பாவிகளும் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் இளம் வயதினராய் இருந்தால் பாதிப்பு கூடுதலாக இருக்கும். அதுவே பச்சிளம் குழந்தையாக இருந்தால் பாதிப்பு இன்னும் படுமோசமாக இருக்கும்.
பெற்றோருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கலாம். அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தினால் சமுதாயத்துக்கு, அவர்களுடைய குடும்பத்துக்கு நன்மை கிடைக்கும். குறைந்த பட்சம் வீடுகளில் வைத்து புகைப்பிடிப்பதை கட்டாயம் நிறுத்த வேண்டும். ஏனெனில் இதனால் பச்சிளம் குழந்தைகளுக்கு மூச்சு விடுதல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு சில நேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும்.
சில பெற்றோர் குழந்தைகள் இருக்கும் அறைகளில் மட்டும் புகைப்பிடிக்க மாட்டார்கள். மற்ற இடங்களில் புகை விடுவார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். புகையை வீட்டுக்குள் விட்டால் தானே பிரச்சினை, வெளியில் விட்டால் பிரச்சினை இல்லையே என்று புத்திசாலித்தனமாக யோசனை செய்து, ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு தம் அடிப்பார்கள். சிலர் தங்களுடைய தனி அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்திக் கொண்டு தம் அடிப்பர். சிகரெட் கம்பெனிகள் தங்களுடைய தயாரிப்பை பயன் படுத்துவதால் எந்தவித கெடுதலும் ஏற்படாது என்று ஆசை வார்த்தைகள் கூறுகின்றன. இதற்கு மயங்குபவர்கள் குறிப்பிட்ட பிராண்டை வாங்கி குடிப்பார்கள். இவற்றால் எந்த பயனும் இல்லை.
சிகரெட் பிடிப்பதால் குழந்தைகளுக்கு ஏற்படும் கெடுதல் பற்றி பெற்றோர் எந்தளவுக்கு தெரிந்து வைத்துள்ளனர் என்று கண்டுபிடிப்பதற்காக இங்கிலாந்தில் ஆய்வு நடத்தப் பட்டது. இதில் மொத்தம் 314 குடும்பங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அவர்களிடம் வீடுகளில் புகைப்பிடித்தல் தொடர்பாகவும், குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பிரச்சினை கள் தொடர்பாகவும் பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டன.
அப்போது 86 சதவீதம் பெற்றோர், புகைப்பிடித்தல் தங்களுடைய குழந்தைகளுக்கு கெடுதலை ஏற்படுத்தும் என்பதில் தெளிவாக உள்ளனர். 10-ல் 9 பேர் தங்களுடைய குழந்தைகளை பாதுகாப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் தவறு செய்கிறார்கள் என்பது தெரிய வந்தது.
பொதுவாக புகைப்பிடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் சீர்கெட்டு விடுகிறது. இந்த நிலையில் நம் வீட்டிலும் புகைப் பிடித்துக் கொண்டு இருந்தால் பாதிப்பு இரு மடங்காகி விடும். ஆகையால் நம்முடைய வீட்டில் புகைப்பிடித்தலுக்கு தடா போட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு கணிசமாக குறையும்.