சிறுநீரகங்களை செயலிழக்க செய்யும்

சிறுநீரகப் பிரச்சினை வந்து விட்டால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. அறுவை சிகிச்சை செய்யாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட நோயாளி உயிரிழக்கும் வாய்ப்பு 4 மடங்கு அதிகம் ஆகும்.

சிறுநீரகப் பிரச்சினை இப்படி அபாயகரமாக இருக்கும் நிலையில், இதயம், ஈரல், நுரையீரல், மற்றும் உள்ளார்ந்த உறுப்புகளுக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு சிறுநீரகங்கள் செயலிழக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது போன்று மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 7 முதல் 21 சதவீதம் பேருக்கு இயற்கையான சிறுநீரகங்கள் 5 ஆண்டுகளில் பழுதடைந்து விடுகின்றன.

உள்ளார்ந்த உறுப்புகள், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த ஆபத்து அதிகம். அதே நேரம் இதயம்-நுரையீரல் மாற்று அறுவை சிசிக்சை செய்து கொண்டவர்களுக்கு ஆபத்து கொஞ்சம் குறைவு தான்.

மாற்று அறுவை சிகிச்சைகளின் போது புதிய உறுப்புகளை உடல் ஏற்றுக் கொள்வதற்காக மருந்துகள் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் தான் பின்னாளில் சிறுநீரகங்கள் பழுதுபட காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆக பொதுவாக மாற்று அறுவை சிகிச்சைகளின் மூலம் தொற்று நோய்கள், புற்றுநோய், எலும்பு வியாதிகள் வரும் வாய்ப்பு உள்ளது. இந்தப் பட்டியலில் சிறுநீரகப் பிரச்சினையையும் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்த ஏகப்பட்ட செலவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் போது ஏற்கனவே மாற்று அறுவை சிகிச்சைகளுக்கு பெரும் பணம் செலவிட வேண்டிய நிலையில், தொடர்ந்து போனசாக தொற்றிக் கொள்ளும் சிறுநீரகக் கோளாறையும் குணப்படுத்த மீண்டும் பெரும் பணம் செலவழிப்பது பெரும்பாலானோருக்கு இயலாத காரியம்.