மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகர், தனது உணர்ச்சிகளோடு விளையாடி தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸையும் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்தது அமலாக்கத்துறை. இந்த நிலையில் போலீசில் ஜாக்குலின் அளித்த வாக்குமூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் தினமும் 2- 3 முறை சுகேஷ் உடன் வீடியோ காலில் பேசுவேன் எனத் தெரிவித்துள்ளார் ஜாக்குலின்.
சுகேஷ் சந்திரசேகர் இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகார் உள்பட 15 மோசடி வழக்குகளின் கீழ் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவர் பற்றிய விசாரணை தொடங்கியபோதுதான் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. இதுபோன்று கோடிக்கணக்கில் பண மோசடிகளை செய்துள்ள சுகேஷ் சந்திரசேகர், தொழில் அதிபருக்கு ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி அவரது மனைவியிடம் ரூ.200 கோடியை மோசடி செய்துள்ள தகவலும் வெளிச்சத்திற்கு வந்தது. பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்ட பல நடிகைகள், மாடல்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் சுகேஷ் சந்திரசேகர். நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சுகேஷ் சந்திரசேகருடன் மிகவும் நெருக்கமாக இருந்த நிலையில், ஜாக்குலினும் மோசடி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்கிறார். பாலிவுட் நடிகை நோரா பதேகி, அருஷா பட்டில், சோபியா சிங் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சாட்சிகளாக உள்ளனர்.
அமலாக்கத்துறை மற்றும் டெல்லி காவல்துறையினர் ஜாக்குலின் பெர்னாண்டஸிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது அவர் அளித்த வாக்குமூலம் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுகேஷ் சந்திரசேகர் இப்படிப்பட்ட மோசடி பேர்வழி என்று தனக்கு தெரியாது என்றும், சுகேஷ் தனது உணர்வுகளுடன் விளையாடி, தனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்றும் ஜாக்குலின் கூறியுள்ளார். அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:-
சுகேஷ் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்பு தான் பல படங்களைத் தயாரிக்கப்போவதாகவும் நான் தென்னிந்திய படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை போன் மற்றும் வீடியோ காலில் பேசிக்கொள்வோம். பேசும்போது ஒருமுறை கூட சிறையிலிருந்து பேசுவதாக என்னிடம் தெரிவித்ததில்லை. சுகேஷ் என்னுடைய உணர்ச்சிகளோடு விளையாடி என்னுடைய வாழ்க்கையையே நரகமாக்கிவிட்டார். கடைசியாக 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பேசினோம். அவரது அறையில் இருந்து வீடியோ காலில் பேசும்போது ஒரு மூலையில் சோஃபாவில் அமர்ந்திருப்பார். மற்ற பகுதிகளில் வைஃபை சிக்னல் சரியாக இல்லை என்று கூறுவார். அதன்பிறகு தான் அவர் சிறையில் இருப்பது குறித்து தெரிந்துகொண்டேன்.
உள்துறை, சட்ட அமைச்சக அதிகாரி என்றெல்லாம் கூறி சுகேஷ் சந்திரசேகர் பலரை ஏமாற்றி சிறையில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். சுகேஷ் என்னை முட்டாள் ஆக்கிவிட்டார். சுகேஷின் விமானத்தில் நான் கேரளாவுக்குச் சென்றபோது என்னிடம் தனது விமானத்தைப் பயன்படுத்தும்படி சுகேஷ் கேட்டுக்கொண்டார். அதோடு கேரளாவில் பயணம் செய்ய ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்தார். சென்னைக்குச் சென்று அவரை இரண்டு முறை சந்தித்தேன். இரண்டு முறையும் அவரது விமானத்தில்தான் சென்று வந்தேன். சுகேஷ் என் உணர்ச்சிகளுடன் விளையாடி, என் வாழ்க்கையை நரகமாக்கி, என் தொழிலையும் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டார். இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாக்குலின் தெரிவித்துள்ளார்.