விஜயகாந்துடன் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் சந்திப்பு!

நடிகர் விஜய்யின் அப்பாவும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார்.

1980, 90 மற்றும் 2000களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். 1979 ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் விஜயகாந்த். ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்த் ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரண்டு ஜாம்பவான்கள் இருந்தபோதே தனக்கான இடத்தை பிடித்த விஜயகாந்த் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டார். அதிகம் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள விஜயகாந்த், போலீஸ் கதாப்பாத்திரங்களில் பட்டையை கிளப்பினார். தமிழ் படங்களில் மட்டுமே நடித்துள்ள விஜயகாந்தின் பல படங்கள் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளன. சினிமாத் துறையில் அனைவருடனும் நல்ல நட்பை கொண்டுள்ள விஜயகாந்த், பல இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுக்கு பாதை அமைத்து கொடுத்துள்ளார்.

நடிகர் விஜய்க்கு சினிமாவில் ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி கொடுத்ததே விஜயகாந்துதான் என அவரது அப்பாவான எஸ்ஏசி பல முறை கூறியிருக்கிறார். மேலும் விஜயகாந்தை விஜி விஜி என்று அழைக்கும் எஸ்ஏ சந்திரசேகர் அவரை தனது மூத்த மகன் என்றும் கூறி வருகிறார். எஸ்ஏசி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த செந்தூரப்பாண்டி படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்தார் விஜய். அந்தப் படம்தான் விஜய்யின் சினிமா கெரியரில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. எஸ்ஏ சந்திரசேகருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார் விஜயகாந்த்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. பேச முடியாமலும் நடக்க முடியாமலும் அவதிப்பட்டு வரும் விஜயகாந்த், குடும்பத்தினர் உதவியுடன் கட்சி அலுவலகத்தில் பிறந்த நாள் உட்பட முக்கியமான நாட்களில் அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வருகிறார். விஜயகாந்தின் நிலையை பார்த்து நம்ம கேப்டனா இது என ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தை நேரில் சந்தித்துள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர். விஜயகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ள எஸ் ஏ சந்திரசேகர், விஜயகாந்திற்கு பூங்கொத்து வழங்கியுள்ளார். மேலும் விஜயகாந்தின் தோள் மீது கைப் போட்டப்படி அவரிடம் பேசியுள்ளார். மேலும் அவரது கைகளை பற்றி முத்தம் கொடுத்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகர். அப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மற்றும் மகன்கள் உடன் இருந்தனர். விஜயகாந்தை சந்தித்த போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள எஸ்ஏ சந்திரசேகர், என் உயிரை நான் சந்தித்த போது என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். விஜயகாந்த், எஸ்ஏ சந்திர சேகர் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.