பாடகி வாணி ஜெயராமின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 30 குண்டுகள் முழுங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். கணவரை இழந்த வாணி ஜெயராம் சென்னையில் உள்ள நுங்கம்பாக்கத்தில் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார். பாடகி வாணி ஜெயராமுக்கு குடியரசு தினத்தன்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் காலமானது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதையடுத்து, தலையில் ஏற்பட்ட காயத்தால் வாணி ஜெயராம் உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்ததால், இயற்கைக்கு எதிரான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தடவியல் நிபுணர்கள் வாணி ஜெயராம் வீட்டுக்கு சென்று சுமார் 20வது நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், வாணி ஜெயராம் படுக்கை அறையில் வழுங்கி விழுந்ததால் அருகில் இருந்த மேசை மீது விழுந்து தலையில் பலமாக அடிப்பட்டுள்ளது என்றும், நெற்றி காயம் மற்றும் மேசை விளிம்பில் ரத்த கறையை வைத்து தடயவியல் நிபுணர் சோதனை நடத்தி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை வாணி ஜெயராமின் இறுதிச்சடங்கில் தமிழக முதல் அமைச்சர் முக ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் சிவக்குமார், நடிகர் பாண்டியராஜன், இசையமைப்பாளர் டி.இமான், இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல், பாடகி ஸ்வேதா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து,பெசண்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு வாணி ஜெயராமின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 10 காவல்துறையினர 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வாணி ஜெயராம் உடலுக்கு மரியாதை அளித்தனர். இதைத்தொடர்ந்து சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.