ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் இயக்க போகும் வெற்றிமாறன்!

வெற்றிமாறன் ‘ஆர் ஆர் ஆர்’ பட நாயகன் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் புதிய படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனது தரமான படைப்புகளின் மூலம் முன்னணி இயக்குனராக திகழ்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்தையும் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும். வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூரியை ஹீரோவாக்கி ‘விடுதலை’ என்ற படத்தை இயக்கி வந்தார் வெற்றிமாறன். இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்திற்கு நடிகர் சூரி சிக்ஸ்பேக் வைத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி செம வைரலானது. அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற ‘விசாரணை’ படம் போலவே இந்த படத்தையும் வித்தியாசமாக இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வந்த ‘விடுதலை’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன் அடுத்ததாக இயக்கவுள்ள படம் குறித்த தகவல்கள் இணையத்தை கலக்கி வாருகின்றன. தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரை வைத்து படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘ஆர் ஆர் ஆர்’ படத்தில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை குவித்தது. ‘ஆர் ஆர் ஆர்’ பட புரமோஷன் ஒன்றில் பேசிய ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறனின் இயக்கம் பற்றியும் அவர் இயக்கத்தில் வெளியான அசுரன் படம் தனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது என்றும் ஜூனியர் என்டிஆர் கூறியிருந்தார். இதனால் வெற்றிமாறன் இயக்கத்தில் என்டிஆர் நடிக்கவுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.