14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று தொடங்கியது. ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதில் பிரதமர் மோடியுடன் கே.ஜி.எப் மற்றும் காந்தாரா கதாநாயகர்கள் சந்தித்து பேசினர்.
பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, 14-வது சர்வதேச விமான தொழில் கண்காட்சி எலகங்கா விமானப்படை தளத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி நிகழ்வான ஏரோஇந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி பெங்களூரில் ‘காந்தாரா’ பட இயக்குனர் ரிஷப் ஷெட்டி, கே.ஜி.எப். நடிகர் யஷ், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினி உள்ளிட்ட கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களை சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த சந்திப்பின் போது கன்னட சினிமா குறித்தும் கன்னட திரையுலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் மோடியுடன் பேசியதாக கூறப்படுகிறது.