நடிகை த்ரிஷா காஷ்மீரில் லியோ படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கும் போட்டோவை வெளியிட்டு பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இதேபோல் தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை த்ரிஷா, டாப் நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார் நடிகை த்ரிஷா. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்யின் லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா. இந்தப் படத்தின் மூலம் 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் மற்றும் த்ரிஷாவுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் மற்றும் மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 2 வாரங்களுக்கு முன்பு படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் புறப்பட்டனர். தொடர்ந்து கடும் பனிப்பொழிவிலும் குளிரிலும் காஷ்மீரில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகை த்ரிஷா டெல்லி விமான நிலையத்தில் இருந்த போட்டோ வெளியானதால் அவர் லியோ படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என தகவல் பரவியது. மேலும் லோகேஷ் கனகராஜூடன் ஏற்பட்ட பிரச்சனைதான் த்ரிஷா லியோ படத்தில் இருந்து விலக காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த தகவல்களை மறுத்த நடிகை த்ரிஷாவின் தாயார் உமா, த்ரிஷா லியோ படத்தில்தான் நடிக்கிறார் என கூறினார். இதையடுத்து த்ரிஷா, படத்தில் இருந்து விலகவில்லை. காஷ்மீரில் நிலவும் கடுமையான குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் டெல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருக்கிறார் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தன்னைப் பற்றி பரவிய வதந்திகளுக்கு எல்லாம் ஒத்த போட்டோவை போட்டு வாயடைக்க வைத்துள்ளார் நடிகை த்ரிஷா. காஷ்மீரில் கொட்டும் பணியில் தனது குழுவினருடன் எடுத்துள்ள போட்டோவை நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் த்ரிஷாவின் ஸ்டைலிஸ்ட் மாலினி கார்த்திகேயன், ஹேர் ஸ்டைலிஸ்ட் ரோகிணி ஆகியோரும் உள்ளனர். புகைப்படத்தை பகிர்ந்த த்ரிஷா காதலர் தினத்தை முன்னிட்டு அனைவரும் இப்படி உடை அணிந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என்றும் பதிவிட்டுள்ளார்.