கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சூர்யா நேரில் சந்தித்தார்!

சச்சின் டெண்டுல்கரை சந்தித்து நடிகர் சூர்யா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சூரரைப் போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது வென்ற உற்சாகத்தில் உள்ள சூர்யா, தற்போது சூர்யா 42-வில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படம் 10 மொழிகளில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சூர்யா 42 படப்பிடிப்பில் பிஸியாக உள்ள சூர்யா, இன்று காலை முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்தார். சூர்யா – சச்சின் நேரில் சந்தித்துக்கொண்ட போட்டோ இணையத்தில் வெளியாகி பயங்கர ட்ரெண்டானது. சச்சின் டெண்டுல்கருடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார் சூர்யா. இதனைப் பார்த்த ரசிகர்கள் இரண்டு ஜாம்பவான்களை ஒன்றாக பார்ப்பதில் மகிழ்ச்சி என கமெண்ட்ஸ் செய்துவந்தனர். அதேபோல், சூர்யா, சச்சின் போன்ற ஹேஷ்டேக்குகளில் இந்தப் போட்டோ செம்ம வைரலானது.

இதனையடுத்து சூர்யாவுடன் இருக்கும் போட்டோவை தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார் சச்சின். மேலும், இன்று காலை சூரிய உதயம் விசேஷமாக இருந்தது. உங்களை சந்தித்தது அற்புதமாக இருந்தது சூர்யா, மனமார்ந்த வாழ்த்துகள் என தமிழில் கேப்ஷன் போட்டுள்ளார். சூர்யாவை சூரிய உதயமாக மாற்றி ரைம்மிங்காக தமிழில் ட்வீட் போட்ட சச்சினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.