மயில்சாமியிடம் மன்னிப்பு கேட்க நினைத்ததாகவும் அதற்குள் இப்படி நடந்துவிட்டதாகவும் கலங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மயில்சாமி. இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சினிமா மட்டுமின்றி பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமி நேற்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு ரஜினிகாந்த், பிரபு, பார்த்திபன், உதயநிதி ஸ்டாலின், மனோ பாலா, சார்லி, எம்எஸ் பாஸ்கர், கோவை சரளா, வையாபுரி என ஏராளமான பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மயில்சாமியின் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டு கண் கலங்கினர். எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கதறி அழுதனர்.
இந்நிலையில் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமிக்கும் தனக்குமான நட்பு குறித்து உருக்கமாக பேசினார். மயில் சாமிக்கு 23, 24 வயதாக இருக்கும் போதே தனக்கு தெரியும் என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த், நெடுங்காலமாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்த போதும் ஏனோ இருவரும் இணைந்து அதிகம் பணியாற்ற முடியவில்லை என வருத்தப்பட்டார்.
மேலும் மயில்சாமி தனக்கு கடைசியாக கடந்த கார்த்திகை தீபத்தன்று கால் செய்தார் என்று கூறிய ரஜினிகாந்த், ஒவ்வொரு கார்த்திகை தீபத்திற்கும் அவர் திருவண்ணாமலை சென்று விட்டு அங்கிருந்து தனக்கு பேசுவார் என்பதையும் நினைவு கூர்ந்தார். கடந்த கார்த்திகை தீபத்தின் போது திருவண்ணாமலையில் இருந்து மயில்சாமி தனக்கு கால் செய்ததாகவும், ஆனால் தான் படப்பிடிப்பில் இருந்ததால் தன்னால் பேச முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார்.
மூன்று முறை மயில்சாமி தனக்கு கால் செய்ததாகவும், அப்போது எடுக்க முடியாமல் போனதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்திருந்ததாகவும், ஆனால் அதற்குள் இப்படி நடந்து விட்டது என்றும் கூறி கலங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். தாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம் என்றும் தன்னை சந்திக்கும் போதெல்லாம் இரண்டு பேரை பற்றி மட்டும்தான் தன்னிடம் பேசுவார் மயில்சாமி, ஒன்று எம்ஜிஆர். மற்றொருவர் சிவன். சினிமாவை பற்றி நானே கேட்டாலும் அதைப்பற்றி பேச மாட்டார் மயில்சாமி என்றும் கூறியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவருடைய வாரிசுகள் தமிழ் சினிமாவில் நல்ல இடத்திற்கு வரவேண்டும் என்று கூறியுள்ள ரஜினிகாந்த், மகா சிவராத்திரியில் நடந்த மயில்சாமியின் மரணம் தற்செயலானது அல்ல, அது சிவனின் கணக்கு என உருக்கமாக கூறியுள்ளார்.
இந்நிலையில் நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க இறுதி மாரியாதை செலுத்தப்பட்டது. சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் அன்பே கடவுள் இல்லத்தில் இருந்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழி நெடுகிலும் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்ற கண்ணீர் மல்க வழி அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மின் மயானத்திற்கு சென்றடைந்த மயில்சாமியின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி அவரது மகன்கள் இறுதி சடங்கு செய்தனர். அதன் பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தையின் உடலை தகனம் செய்த மயில்சாமியின் மகன்கள் கதறி அழுத காண்போரை கலங்க செய்தது. இறுதிச்சடங்கில் மயில்சாமியின் உறவினர்கள், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, நடிகர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் பங்கேற்று கண்ணீர்மல்க அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.