பிரபல மலையாள நகைச்சுவை நடிகை சுபி சுரேஷ் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் நகைச்சுவை நடிகையாகவும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் வலம் வந்தவர் சுபி சுரேஷ். பிரபல தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக இருந்த சுபி சுரேஷ் தனது திறமையால் திரைத்துறையில் தடம் பதித்தார். விஜேவாக இருந்த போதே ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்த சுபி சுரேஷுக்கு, சினிமாவில் நடிக்க தொடங்கிய பிறகு ரசிகர் பட்டாளம் இன்னும் பெருகியது.
இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுபி சுரேஷ், தனது தனித்துவமான நடிப்பால் மலையாள சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் சுபி சுரேஷ். இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலை சுபி சுரேஷ் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். 42 வயதே ஆன நடிகை சுபி சுரேஷின் மறைவு மலையாள திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சுபி சுரேஷின் மறைவுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது இரங்கல் செய்தியில் மலையாள சினிமா நல்ல எதிர்காலம் உள்ள ஒரு கலைஞரை இழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதேபோல் கேரள கவர்னர் ஆரிப் முகமது கானும் சுபி சுரேஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டில், “கேரளாவில் பிரபல திரைப்பட மற்றும் தொலைக்காட்சி ஆளுமையாக இருந்த திருமதி சுபி சுரேஷின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா முக்தி அடையட்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.