மார்க் ஆண்டனி பட விபத்தில் இருந்து நூலிழையில் உயிர் தப்பியதாக விஷால் மற்றும் எஸ்.ஜே சூர்யா ட்விட் செய்துள்ளனர்.
த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பிரபுதேவா நடித்த பஹிரா போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி. இப்படத்தில் ரீத்து வர்மா, எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மார்க் ஆண்டனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஷால், கைதி பட கார்த்திக்போல இருந்தார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துவரும் இப்படத்திற்கு அபினந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு பணிகளை வருகின்றனர்.
மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி ஈவிபி ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்தது. நேற்று நடந்த படப்பிடிப்பில் சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்த போது, படப்பிடிப்பு தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த லைட் வாகனம் ஒன்றில் திடீர் கோளாறு ஏற்பட்டு அந்த வாகனம் அதிவேகமாக, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தது. வாகனம் அதிவேகமாக வருவதை கவனித்த தொழிற்நுட்ப கலைஞர்கள், சுதாரித்துக்கொண்டு அலறி அடித்துக்கொண்டு ஓடினர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. படப்பிடிப்பு தளத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இருந்த நிலையில் யாரும் எந்தவிதமான காயமும் இல்லாமல் உயிர்தப்பித்து உண்மையில் கடவுளுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த விபத்து நடந்த வீடியோவை ஷேர் செய்து, ஜஸ்ட்டு மிஸ்.. சில அங்குலங்களில் உயிர் தப்பினேன், எல்லாம் வல்ல கடவுளுக்கு நன்றி. தற்போது மீண்டும் ஷூட்டிங் திரும்பியுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளார்.
விஷாலின் டுவீட்டை ரீட்வீட் செய்த எஸ்.ஜே சூர்யா, உண்மையிலேயே கடவுளுக்கு நன்றி.. நூலிழையில் உயிரே தப்பினோம்.. தற்செயலாக, நேராக செல்வதற்கு பதிலாக, லாரி கொஞ்சம் குறுக்காகச் சென்றதால், விபத்து ஏற்பட்டது, அது நேராக வந்திருந்தால் நாங்கள் இருவரும் இப்போது ட்வீட் செய்திருக்க மாட்டோம், கடவுளுக்கு நன்றி, நாங்கள் அனைவரும் தப்பித்துவிட்டோம் என பதிவிட்டுள்ளார்.