மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கு மலையாளம் தெரியாதது வருத்தமாக உள்ளது என சமந்தா கூறியுள்ளார்.
குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் சாகுந்தலம் படம் ஏப்ரல் 14ம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்திருக்கிறார். சாகுந்தலம் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா. இந்நிலையில் கேரள மாநிலம் கொச்சியில் நடந்த விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது சமந்தா கூறியதாவது:-
எனக்கு மலையாள படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரே மாதிரி நடிப்பதாக தோன்றினால் உடனே மலையாள படத்தை தான் பார்ப்பேன். மலையாள படங்களில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் பகத் பாசிலின் நடிப்பை பார்த்து அசந்துவிட்டேன். ஒவ்வொரு மலையாள நடிகரும் சிறப்பாக நடிக்கிறார்கள்.
மலையாள படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. ஆனால் எனக்கு மலையாளம் தெரியாதது வருத்தமாக உள்ளது. என் அம்மா ஒரு மலையாளியாக இருந்தும் கூட எனக்கு மலையாளம் கற்றுக் கொடுக்காமல் இருந்துவிட்டார்கள். அதை நினைத்து அவர் மீது எனக்கு தற்போதும் கூட வருத்தம் இருக்கிறது. மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மலையாளம் கற்றுக் கொண்டு நானே பேசுவேன் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.