விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட தடை!

நடிகர் விஷால் 21 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரத்தில், 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து இருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், அந்த தொகையை செலுத்த தவறினால் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் திரைப்படங்களை வெளியிட தடை விதிக்கப்படும் என்று உத்தரவிட்டு உள்ளது.

பிரபல தமிழ் திரைப்பட நடிகரான விஷால், விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் கீழ் தான் நடித்த திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு நடிகர்களின் திரைப்படங்களை அவர் தயாரித்து வந்தார். இவர் தனது நிறுவனத்தின் சார்பில் திரைப்படங்களை தயாரிக்க பிரபல சினிமா பைனான்ஷியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் கடன் பெற்று வந்துள்ளார். இவ்வாறு அவர் பெற்ற ரூ.21.29 லட்சம் கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், தான் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல், கொடுத்த உத்தரவாதத்தை மீறி விஷால் நடித்த வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட தடை கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ரூ.15 கோடியை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் வங்கியில் நிரந்தர வைப்பீடாக டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யுமாறும் விஷாலுக்கு உத்தரவிட்டு இருந்தது. தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் விஷால் தரப்பு மேல் முறையீடு செய்து இருந்தது. இந்த மேல் முறையீட்டு மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ரூ.15 கோடி விஷால் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை அவர்கள் உறுதி செய்து தீர்ப்பளித்து உள்ளனர். அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதியிடம் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பு வரும் வரை விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டனர்.