நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடி!

நடிகை நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமாயிருந்தார் நயன்தாரா. ஆனால், அப்படம் பெரிதாகக் கைகொடுக்கவில்லை. தொடர்ந்து 2005ல் தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். அதன்பின் நடிகர்கள் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கான இடத்தைப் பிடித்தார். தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் அட்லி இயக்கத்தில் வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் நாயகியாக மிகப்பெரிய வருகையை பதிவு செய்து தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்தார்.

ஒரு படத்திற்கு ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடி வரை சம்பளம் கேட்கும் நயன் தற்போது ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். சம்பாதிக்கும் பணத்தை தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நம்பகமான தொழில்களில் முதலீடும் செய்து வருகிறார். இதுபோக தன் சொந்தத் தேவைகளுக்காக தனியார் ஜெட் விமானம் ஒன்றையும் வைத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நயன்தாராவின் சொத்து மதிப்பு ரூ.200 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.