பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அமைச்சர் பிடிஆர் ஆடியோ குறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் அடுத்த ஆடியோவை வெளியிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. முந்தைய ஆடியோவில், திமுக ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்துவிட்டனர் என்றும் அந்த மாதிரி அவர்களது முன்னோர்கள் கூட சம்பாதிக்கவில்லை என்று பேசியிருந்தது பகீர் கிளப்பியது. திமுக அரசு மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பல்வேறு ஊழல், கமிஷன் குற்றசாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அதனை எளிய மக்கள் கடந்து சென்றாலும் ஒரு அரசின் நிதி அமைச்சரே அந்த கட்சி தலைமையின் மோசடியை சொல்லி புலம்புவது கலக்கம் அடைய செய்துள்ளது. இதற்கு அரசு உரிய விளக்கத்தை இன்னும் தெரிவிக்காமல் உள்ளது.
இந்த நிலையில், முதல் ஆடியோவை விட நீளமாக உள்ள இந்த இரண்டாவது ஆடியோ 57 நொடிகள் ஓடுகிறது. அதில், எனக்கு பாஜகவிடம் பிடித்த விஷயம் ஒரு நபர் ஒரு பதவி என்ற கொள்கைதான். கட்சியையும் மக்களையும் பாத்துக்கொள்ளும் பொறுப்பு தனித்தனியே இருக்க வேண்டும். இங்கு எல்லா முடிவுகளையும் எம்.எல்.ஏகளும் அமைச்சர்களும்தான் எடுக்கின்றனர். இதெல்லாம் ஒரு அமைப்பா? அவர்களுக்கு வரும் ஊழல் பணம் அனைத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்கிறார்கள். இங்கு கட்சியே முதல்வரின் மகனும், மருமகனும்தான். இப்போது நான் பதவியில் இருந்து விலகினால் எதிர் வினையாக அவர்களுக்கே திருப்பி அடிக்கும்” என்று பதிவாகியுள்ளது.
இதேபோல வெளியான முதல் ஆடியோவை மறுத்த பிடிஆர், இது என்னுடைய குரல் அல்ல. தொழில்நுட்பத்துடன் புனையப்பட்டுள்ளது. என் மீது இவ்வாறு வைக்கப்படும் குற்றசாட்டுகளுக்காக புகார் எதுவும் கொடுக்க விரும்பவில்லை. இனி இதுபோல பல ஆடியோக்கள் வரலாம்.. என்று அவர் விளக்கம் அளித்திருந்தார். இருப்பினும் இந்த விளக்கம் திமுகவினருக்கு திருப்தி அளிக்கவில்லை. ஆடியோ வெளியிட்டவர்கள் ”அது பிடிஆர் குரல்தான் என்பதில் உறுதியாகவும், மேல்மட்ட விசாரணைக்கு செல்ல தயார் என்றும் கூற, அமைச்சர் பிடிஆர் ”நான் எந்த புகாரும் தர போவதில்லை” என்று கூறியது இந்த விவகாரத்தை கடந்து செல்ல முயல்வதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று இன்னொரு ஆடியோவை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வரும் நிலையில் நடிகை கஸ்தூரி டுவீட் போட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது. கஸ்தூரி ட்வீட்டில், ”ஒரு முழு உரையாடலையும் உருவாக்கும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதா? சரிபார்க்காமல் ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி அதைப் பகிர்வாரா? இது அமைச்சர் பிடிஆருக்கோ அல்லது திமுகவுக்கோ நல்லதல்ல” என இவ்வாறு கூறியுள்ளார்.