ரஜினிகாந்த் பேசியது யார் எழுதி கொடுத்தது: ரோஜா

சந்திரபாபு நாயுடு குறித்த நடிகர் ரஜினிகாந்தின் பேச்சு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பை கொதிப்படைய வைத்திருக்கிறது. அமைச்சர் ரோஜா நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

தெலுங்கு தேசம் கட்சி நிறுவனரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான மறைந்த என்.டி.ராமாராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா விஜயவாடாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஹைதராபாத் ஹைடெக் சிட்டியாக இன்று வளர்ச்சி அடைந்திருப்பதற்கு சந்திரபாபு நாயுடு தான் காரணமென்றும், அவரது தொலைநோக்குத் திட்டங்களால் தான் இது சாத்தியமானது எனவும் புகழ்ந்திருந்தார். அதுமட்டுமல்ல என்.டி.ராமாராவின் ஆசி சந்திரபாபு நாயுடுக்கு உள்ளதாகவும் பேசியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆந்திர அமைச்சர் ரோஜா, நடிகர் ரஜினிகாந்த் பேச்சை கேட்டால் தனக்கு சிரிப்பு தான் வருவதாக கலாய்த்துள்ளார். மேலும், 2003ஆம் ஆண்டுடன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டதாகவும் 20 ஆண்டுகளாக ஹைதராபாத் நகரை ஆட்சி செய்யாத சந்திரபாபு நாயுடுவால் அந்த நகரம் எப்படி வளர்ச்சி பெற்றிருக்கும் எனவும் கூறினார்.

ரஜினிகாந்து தெரிந்து தான் பேசினாரா இல்லை சந்திரபாபு நாயுடு எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டை பார்த்து படித்தாரா என வினவிய ரோஜா, என்.டி.ராமாராவ் மரணத்திற்கு காரணமே சந்திரபாபு நாயுடு தான் என சாடினார். அப்படியிருக்கும் போது என்.டி.ஆரின் ஆசி எப்படி சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைக்கும் எனக் கேட்டார். என்.டி.ஆர். தன்னுடைய இறுதிக்காலத்தில் சந்திரபாபு நாயுடு பற்றி கூறியது ரஜினிகாந்துக்கு தெரியவில்லை என்றால், அது தொடர்பான சிடியை அனுப்புவதாகவும் தெரிவித்தார்.