சனாதனம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜ் டுவீட் செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் தலைப்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டு இருக்கிறீர்கள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும்; எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதைஎல்லாம் நாம் எதிர்க்க கூடாது ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்பது சமத்துவத்திற்கு சமூகநீதிக்கும் எதிரானது” என கூறி இருந்தார்.
சனாதனம் என்பது மலேரியா, டெங்கு போன்றது. அதை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு எதிராக பாஜகவினர் தேசிய அளவில் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். உதயநிதி ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து இயக்குநர் மாரி செல்வராஜ் டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளார். அதில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி வாழ்த்துக்கள் அதிவீரன் என பதிவிட்டுள்ளார்.