உதயநிதி ஸ்டாலின் தெளிவாகப் பேசியுள்ளார் என சனாதன சர்ச்சை குறித்து நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்தியராஜின் தாயார் நாதாம்மாள் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி கோவையில் காலமானார். அன்றைய தினம் திமுக சார்பில் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா நாதாம்மாள் உடலுக்கு மரியாதை செலுத்தி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள நடிகர் சத்யராஜின் வீட்டிற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சத்தியராஜ் கூறியதாவது:-
எனது அம்மாவுக்கு 94 வயதானதால் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அப்போதே எனக்கு தொலைபேசியில் அழைத்து முதலமைச்சர் ஆறுதல் கூறினார். மறுபடியும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியமில்லை, இருந்தாலும் என் மீது உள்ள அன்பின் காரணமாக வந்து ஆறுதல் சொன்னார். தமிழ்நாடு முதலமைச்சர் உடன் 1986ஆம் ஆண்டு பாலைவன ரோஜாக்கள் படம் முதல் எனக்கு மிகவும் பழக்கம், இருவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நட்பு உள்ளது.
மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் தெளிவாக பேசி உள்ளார். அவருடைய சிந்தனை தெளிவுக்கும், அவருடைய துணிச்சலுக்கும், அவர் ஒவ்வொரு விஷத்தையும் கையாளும் முறையும் எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. இதற்காக உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.