தென்னிந்திய சினிமா, கலாச்சாரம், உணவு எனக்குப் பிடித்திருக்கிறது என்று கங்கனா ரனாவத் கூறினார்.
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, சிருஷ்டி டாங்கே உட்பட பலர் நடித்துள்ள படம், ‘சந்திரமுகி 2’. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு கீரவாணி இசை அமைத்துள்ளார். வரும் 15ம் தேதி வெளியாகும் இந்தப் படம் பற்றி செய்தியாளர்களிடம் நடிகை கங்கனா ரனாவத் கூறியதாவது:-
‘தாம் தூம்’ படத்துக்குப் பிறகு நான் தமிழில் நடிக்கவில்லை. அதிகம் இடைவெளி விழுந்துவிட்டது. அதற்குச் சரியான வாய்ப்புகள் வராததுதான் காரணம். இதற்கிடையில் இந்தியில் நாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளில் நடித்தேன். பிறகு ‘தலைவி’ படம் கிடைத்தது. அதற்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளேன். நான் தமிழில் அதிகம் நடிக்காததற்கு உங்கள் இயக்குநர்களிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும்.
‘சந்திரமுகி 2’ எனக்கு 3-வது தமிழ்ப் படம். இதன் முதல் பாகத்தில் ஜோதிகா சிறப்பாக நடித்திருந்தார். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால், என்னை அவருடைய ‘பேவரைட்’ நடிகை என்று கூறியிருந்த வீடியோவை பார்த்தேன். ஜோதிகா, அதில் கங்கா என்ற பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் நான் சந்திரமுகியாகவே வருகிறேன். இதன் படப்பிடிப்பின் ஆரம்பத்தில் சக நடிகர், நடிகைகளுடன் பேசாமல் இருந்தேன். பிறகு பழகிவிட்டேன். என் வீட்டில் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்பட்டது. பிரேக் நேரத்தில் கூட யாரும் கேரவனுக்கு செல்லாமல் அமர்ந்து படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதைப் பார்த்து இந்தி திரையுலகம் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தென்னிந்திய சினிமா, கலாச்சாரம், உணவு எனக்குப் பிடித்திருக்கிறது. இவ்வாறு நடிகை கங்கனா ரனாவத் கூறினார்.