இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி வளமான ஆட்சி மொழியாக உருவெடுக்கும் எனக் குறிப்பிட்டு இருந்தார். அமித்ஷாவின் இந்த பேச்சை அரசியல் பிரமுகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் பிரகாஷ் ராஜும் சாடியுள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்தி திணிப்பில் ஈடுபடுவதாக இந்தி பேசாத மாநிலங்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து இந்தக் குரல் சற்று ஓங்கி ஒலிப்பதுண்டு. இந்த நிலையில், தான், இந்தி தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் பேசு பொருளானது. அமித்ஷா கூறும் போது, “உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருகிறது. இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல்வேறு மொழிகளுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் மொழியாக இந்தி இருக்கிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கு அதிகாரமளிக்கும் ஊடகமாக இந்தி மாறும். சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக இந்தி இருக்கிறது.. ஐக்கிய நாடுகள் சபையிலும் இந்தியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடுமையான எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. நடிகர் பிரகாஷ் ராஜ் இது தொடர்பாக உள்துறை அமைச்சரை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “உங்களுக்கு இந்தி தெரியும் என்பதால் நீங்கள் இந்தி பேசுகிறீர்கள். எங்களை இந்தி பேசும் படி சொல்கிறீர்கள். ஏனெனில், உங்களுக்கு இந்தி மட்டுமே தெரியும்” என்று பதிவிட்டுள்ளார். #StophindiDiwas என்ற ஷேஷ்டேக்கும் பிரகாஷ் ராஜ் பதிவு செய்துள்ளார்.