சிறையில் ஏ கிளாஸ் வசதி தாங்க: ரவீந்தருக்காக நடிகை மகாலட்சுமி மனு!

பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சீரியல் நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தர் சந்திரசேகருக்கு முதல் வகுப்பும் கிடையாது, ஜாமீனும் கிடையாது என நீதிமன்றம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அசோக் நகர் 19ஆவது அவென்யூவில் அபார்ட்மென்டில் வசித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகர் (39). இவர் திரைப்பட தயாரிப்பாளர். லிப்ரோ என்ற தயாரிப்பு நிறுவனத்தை வைத்து நடத்தி வருகிறார். இவர் நட்புனா என்னானு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற தமிழ் படங்களை தயாரித்துள்ளார். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை மகாலட்சுமி. இவரை காதலித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம்தேதி திருமணம் செய்து கொண்டார் ரவீந்தர். இவர்களது திருமணம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை திருமணம் செய்த போது ரவீந்தர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். முதல் மனைவி ஹெலனை விட்டுவிட்டு வனிதாவை திருமணம் செய்ததால் கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தார். ஆனால் தற்போது ரவீந்தரே ஏற்கெனவே திருமணமாகி குழந்தை இருக்கும் மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டாரே என விமர்சனங்கள் எழுந்தன. ரவீந்தர் குண்டாக இருக்கிறார், மகாலட்சுமி ஸ்லிம்மாக இருக்கிறார். இந்த திருமணம் எத்தனை நாட்களுக்கு நீடிக்குமோ என பேசிய வாய்களை இருவரும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொண்ட தங்கள் அன்பின் மூலம் அடைத்தனர்.

அண்மையில் முதல் திருமண நாளை கொண்டாடிய நிலையில் யார் கண்ணுபட்டுச்சோ தெரியவில்லை! தற்போது ரவீந்தர் சிறையில் இருக்கிறார். ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையைச் சேர்ந்த தனியார் விளம்பர நிறுவனத்தின் நிர்வாகி பாலாஜி கபா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு அளித்திருந்தார். அதில் ரவீந்தர் ரூ 200 கோடி மதிப்பில் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை தொடங்கியிருப்பதாக கூறி தன்னிடம் ரூ 16 கோடி மோசடி செய்ததாக புகார் தெரிவித்துள்ளார். இவர் போலி ஆவணங்களை காட்டி மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் ரவீந்தர் சந்திரசேகரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ரவீந்தரின் மனைவி மகாலட்சுமி, ஜாமீன் வழங்கக் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் சிறையில் ஏ கிளாஸ் வசதிகள் வழங்க வேண்டும் என்றும் மகாலட்சுமி இன்னொரு மனுவை தாக்கல் செய்திருந்தார். மத்திய குற்றப்பிரிவு வழக்குகளை விசாரிக்கும் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரேவதி, குற்றம்சாட்டப்பட்ட ரவீந்தரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அவரை வெளியே விட்டால் சாட்சிகளை அழிக்கக் கூடும் என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வாதம் செய்ததை நீதிபதி கருத்தில் கொண்டார். இதனால்தான் அவருடைய ஜாமீன் மனுவும் ஏ கிளாஸ் சிறை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.