நடிகை கௌரி கிஷான் நடிகர் ஜிவி ப்ரகாஷுடன் இணைந்து நடித்த படம் தான் அடியே. இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருக்கிறார். செந்தாழினி என்னும் கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி என கௌரி கிஷான் பேசியிருக்கிறார்.
96 படத்தில் நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்தான் நடிகை கௌரி கிஷான். இந்த கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருந்தார் அவர். அவரின் சினிமா வாழ்க்கையில் 96 படம் மிகவும் முக்கியமான படம் என்றும், அதில் அவருக்கு கிடைத்த ஜானு கதாபாத்திரம் மறக்கவே முடியாத ஒரு கதாபாத்திரம் என்றும் அவர் பல இடங்களில் பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ், நடிகை கௌரி கிஷான், வெங்கட் பிரபு இன்னும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான படம்தான் அடியே. இந்த படம் ஒரு மல்டி வேர்ஸ் படமாகும். இந்த படத்திற்கு ரசிகர்களின் ஆதரவும் வரவேற்பு நன்றாக அமைந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழுவினருக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் அனைவரும் அவர்களின் அனுபவத்தையும் படத்தை பற்றியும் பேசினார்கள். அப்போது பேசிய படத்தின் கதாநாயகி, கௌரி கிஷான் கூறுகையில், “இந்த படத்தில் கொடுக்கப்பட்டிருந்த செந்தாழினி கதாபாத்திரம் மிகவும் சிறந்த கதாபாத்திரம், அதில் நடிக்க கூப்பிடும்போது, அந்த கதாபாத்திரத்தின் சவால் எனக்கு புரிந்தது. இது என் வயதிற்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும், நல்ல கதாபாத்திரம் எனபதால் நடித்தேன். ஜானு கதாபாத்திரம் எவ்வளவு அழுத்தமான கதாபாத்திரமோ அதேபோல சொல்லபோனால் அதைவிட அழுத்தமான கதாபாத்திரம்தான் இந்த படத்தின் செந்தாழினி” என்றார்.
மேலும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஜானுவை மறக்க வைத்துவிட்டீர்கள் என கமெண்ட் கூறியதாகவும் அவர் கூறினார். இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் மிகவும் வித்தியாசமான சிந்தனையையும் கற்பனையையும் உடையவர். செந்தாழினி என்னும் கதாபாத்திரத்தை கொடுத்ததற்கு நன்றி என அவர் கூறினார்.