4 நடிகர்களுக்காகவே தமிழ் சினிமா இயங்குகிறது: தங்கர்பச்சான்!

நான்கைந்து நிறுவனங்களுக்காகவும் நான்கைந்து நடிகர்களுக்காக மட்டுமே தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது என்று இயக்குநர் தங்கர்பச்சான் கூறினார்.

சித்த மருத்துவர் வீரபாபு இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘முடக்கறுத்தான்’. கே.ஆர் விஜயா, புதுமுகம் ரேவதி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்குச் சிற்பி இசை அமைத்துள்ளார். பழநிபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழருவி மணியன், இயக்குநர்கள் தங்கர்பச்சான், சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் தங்கர் பச்சான் பேசும்போது கூறியதாவது:-

திரைப்படக் கலை மக்களை முன்னேற்றுவதற்காக, மேம்படுத்துவதற்காகத்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்த கலை இன்று அப்படியிருக்கிறதா என்பது கேள்வி. அதை வணிகமாகப் பார்த்தவர்கள் கையில்தான் இன்று சினிமா சிக்கிக்கொண்டு இருக்கிறது. எந்த படம் நம் மனதைச் சிதைக்குமோ, எந்த படம் நம் குழந்தைகளுக்குக் காட்டப்படக் கூடாதோ அப்படிப்பட்ட படங்களை ஊக்குவிப்பவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.

நான்கைந்து நிறுவனங்களுக்காகவும் நான்கைந்து நடிகர்களுக்காக மட்டுமே தமிழ் சினிமா இயங்கிக்கொண்டிருக்கிறது. இதிலிருந்து ‘முடக்கறுத்தான்’ என்ன செய்யும் என்று தெரியவில்லை. இது வருத்தத்துக்குரிய விஷயம். இந்தப் படம் மக்களைப் பற்றி, இந்த மண்ணைப் பற்றி அக்கறை கொண்ட படம். இதற்கு ரசிகர்கள் என்ன மதிப்பு கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வீரபாபு போன்ற ஒரு மருத்துவர் தமிழ் மண்ணுக்குக் கிடைத்த பெரிய கொடை. அவர் கடமையைச் செய்திருக்கிறார். அவருக்குத் திருப்பி தரவேண்டியது நம் கடமை. இவ்வாறு தங்கபச்சான் பேசினார்.