அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகத்திற்கு ரஜினிகாந்துக்கு அழைப்பு!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிசேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்கும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் வரும் 22ம் தேதி கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திரமோடி கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்படும் ராமர் சிலையை எடுத்து வந்து வழங்க உள்ளார். இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு துறைகளில் சாதித்த பிரபலங்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். தற்போது ஒவ்வொருவருக்கும் கோவில் அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் என்பது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க வரும்படி நடிகர் ரஜினிகாந் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத அமைப்பாளர் செந்தில்குமார், பாஜகவின் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து இந்த அழைப்பிதழை வழங்கி உள்ளனர். சென்னை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் ஆர்எஸ்எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர். அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த் உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளாதாக கூறப்படுகிறது. இதன்மூலம் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.