உச்ச நீதிமன்றத்தில் விஜய் சேதுபதி மனு தள்ளுபடி!

நடிகர் விஜய் சேதுபதி மீதான கிரிமினல் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றத்தில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விஜய் சேதுபதியை விமான நிலையத்தில் வைத்து ஒருவர் தாக்குவது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், விஜய் சேதுபதியை தாக்கியது நடிகர் மகா காந்தி என்பது தெரிய வந்தது. இந்த பிரச்சினையில், இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்ட காரணத்தினால் அது தொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் மகா காந்தி விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். ஆனால் அந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரி, நடிகர் விஜய் சேதுபதி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரச்சினையை இரு தரப்பும் ஒன்றாக உட்கார்ந்து பேசி முடித்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறியது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் ஏற்கனவே இந்த விவகாரத்தை சமரசமாக பேசி முடித்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியதை மேற்கோள் காட்டியது. அதற்கு விஜய் சேதுபதி தரப்பு, அந்த பேச்சுவார்த்தை சந்தித்ததாகவும், மகா காந்தி தரப்பு தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும் கூறியது. ஆனால் நீதிமன்றம், விஜய் சேதுபதி மனுவை தள்ளுபடி செய்ததோடு கீழமை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.