டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்களை நினைத்து அச்சம் கொள்கிறேன்: ராஷ்மிகா!

டீப் ஃபேக் தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சம் கொள்வதாகவும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனக்கு மிக முக்கியம் என்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் ‘டீப் ஃபேக்’ ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம், நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் இருப்பது ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ் இந்திய பெண் என்றும், ஏஐ டீப் ஃபேக் (Al Deepfake) தொழில்நுட்பம் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று மாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்தது. அது ராஷ்மிகாவின் போலி வீடியோ என்று கண்டறிந்தபோது, சுமார் 15 மில்லியனுக்கும் மேலான பேர் அதை பார்த்திருந்தனர் என கூறப்பட்டது. இந்த போலி வீடியோவை உருவாக்கிய முக்கிய குற்றவாளி அண்மையில் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், டீப்ஃபேக் வீடியோவால் பெண்கள் பாதிக்கப்படுவது குறித்து ராஷ்மிகா சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

இது தொடர்ந்து நடக்கிறது. நாம் இதைப் பற்றி பேசினால், ‘விரும்பித்தானே இந்த வேலையை தேர்ந்தெடுத்தீர்கள்’ என்று சிலர் கேட்கின்றனர். அல்லது ‘இப்படித்தான் நடக்கும் என்று தெரியாதா, ஏன் இப்போது இதைப் பற்றி பேசுகிறீர்கள்?’ என்று கேட்கின்றனர். ஒருவேளை இது என்னுடைய கல்லூரி காலத்தில் நடந்திருந்தால், எனக்கு ஆதரவாக கூட யாரும் வந்திருக்க மாட்டார்கள் என்ற ஒரே எண்ணம் தான் என்னுடைய மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. காரணம், நம்மைப் பற்றி சமூகம் என்ன நினைக்கிறதோ, நாமும் அப்படியே இருக்க வேண்டும் என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்கம். சமூகம் விரும்பும்படிதான் நாம் நடக்க வேண்டும், எதிர்வினை ஆற்றவேண்டும், இல்லையா?

ஒரு பெண் இதே விஷயத்தை எதிர்கொள்கிறார் என்பதை கற்பனை செய்து பாருங்கள். உண்மையில், அந்தப் பெண்களை நினைத்து நான் அச்சம் கொள்கிறேன். எனவே, ஒருவேளை அதைப் பற்றி நான் பேசினால், குறைந்தபட்சம் 41 மில்லியன் மக்களுக்காவது டீப் ஃபேக் என்றால் என்ன? அது சரியானது அல்ல, அது பொதுவாக மக்களுக்கு அவர்களது உணர்வுகளை பாதித்து, மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியது என்று தெரியவரும். எனவே, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனக்கு மிக முக்கியம். இவ்வாறு ராஷ்மிகா கூறியுள்ளார்.