நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு!

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் பயணிகள் அச்சமடைந்த நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார்.

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னட, தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவருக்கு என்று தமிழ்நாட்டில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த ஆண்டு ராஷ்மிகா மந்தனா குறித்த ‛டீப் ஃபேக்’ வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதில் ராஷ்மிகா மந்தனா மனவருத்தத்துக்கு உள்ளானார். இதையடுத்து தற்போது ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் தான் ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானம் திடீரென்று நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதும், ஆபத்தான நிலையில் அவர் விமானத்தில் இருந்து பத்திரமாக தப்பியது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவனத்தில் விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். இந்த வேளையில் அவருடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்தார். இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்தது. மும்பையில் இருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை கவனித்த பைலட் உடனடியாக அலர்ட் ஆனார். மேலும் அவர் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கி உள்ளார். இதனால் விமானத்தில் பயணித்த நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இத்தகைய சூழலில் தான் ராஷ்மிகா மந்தனா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டபோது உயிர் தப்பித்தது எப்படி? என்பது பற்றி போட்டோவுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அதாவது ராஷ்மிகா மந்தனா, நடிகை ஷ்ரத்தா தாசுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ என்பது 2 போட்டோக்களை இணைத்தபடி உள்ளது. முதல் பாதியில் ராஷ்மிகா மந்தனா, ஷ்ரத்தா தாஸ் ஆகியோர் சிரித்தபடி உள்ள நிலையில் 2வது பாதியில் அவர்களின் கால்கள் இடம்பெற்றுள்ளது. அதாவது இருவரும் தாங்கள் அமர்ந்திருந்த இருக்கையின் முன்புள்ள சீட்டின் மீது அழுத்தமாக மிதித்து இருக்கும் வகையில் அந்த போட்டோ உள்ளது. மேலும், ‛‛உங்களின் தகவலுக்காக.. இப்படித்தான் நாங்கள் விமான விபத்தில் இருந்து உயிர் தப்பினோம்” என தெரிவித்துள்ளார். அதாவது தான் விமான பயணத்தை ஷ்ரத்தா தாசுடன் மேற்கொண்டதாகவும், விமானத்தில் ஏற்பட்ட கோளாறால் பதற்றமடைந்தது மற்றும் இறுதியாக உயிர் தப்பியதை நினைத்து மகிழ்ச்சியடைந்ததை வெளிக்காட்டும் வகையில் அவர் இந்த போட்டோவை வெளியிட்டுள்ளார். இருப்பினும் மேற்கொண்டு அவர் எதையும் குறிப்பிடவில்லை.

இதற்கிடையே தான் ராஷ்மிகா மந்தனா பயணித்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு பற்றி விஸ்தாரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கருத்து கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:-

பிப்ரவரி 17 ம் தேதி UK531 எனும் விஸ்தாரா விமானம் மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு புறப்பட்டது. சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளறு கண்றியப்பட்டது. இதையடுத்து மீண்டும் விமானத்தை மும்பைக்கு தரையிறக்க முடிவு யெசய்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கோளாறு உடனடியாக சரிசெய்யப்படவில்லை. இதையடுத்து மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு பயணிகள் திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த வேளையில் பயணிகளுக்கு தேவையான உணவு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்பட்டன. பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துகிறோம். விஸ்தாராவை பொறுத்தமட்டில் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது” என தெரிவித்துள்ளார்.