ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு இந்த திருடர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பை கொடுக்காதீர்கள். தயவு செய்து அந்த மாற்றத்தை கொண்டு வாருங்கள் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
விஜய் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டதற்கு நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:-
புதுசா அரசியலுக்கு யார் வந்தாலும் பிடிக்க மாட்டேங்கிது சிலருக்கு. அதாவது திருடுனவங்களே தொடர்ந்த திருடணும்னு நினைக்கிறார்கள். விஜய் தம்பி அரசியலுக்கு வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. அவர் மட்டுமில்லை இன்னும் பல நடிகர்கள் அரசியலுக்கு வருவார்கள். ஒரு விஜய் இல்லை, ஓராயிரம் விஜய் வந்தாலும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படி யாராவது செய்துவிட்டால் நான் தெய்வமாக வைத்து வழிபடுவேன். தேர்தலுக்கு தேர்தல் 500 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் யாருமே நாம் பொய்யான வாக்குறுதியை தந்தோமே என குற்ற உணர்ச்சியாக நினைக்கவே இல்லை. என்னை போன்றோர் விரும்புவது, நல்ல ஆட்சி வராதா, சொன்னதை செய்ய மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புதான் உள்ளது. சொல்றீங்களே வெட்கமாக இல்லை, அதையே சொல்லி சொல்லி திரும்பவும் ஓட்டு கேட்டு வர்றீங்களே. இப்படி யாராவது வாக்குறுதிகளை நிறைவேற்றினால் அவர்களின் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தி கொள்கிறேன்.
விஜயகாந்த் மாதிரி நல்ல மனிதரை பார்க்கவே முடியாது. சினிமாவை தாண்டி அவரை போற்றாத கட்சியினரே இல்லை. ஆனால் அரசியல் என வந்துவிட்டால் நல்லவர் கட்சி ஆரம்பித்தால் கூட தான் சார்ந்த கட்சிக்கு முட்டுக் கொடுத்து வர்ற நல்லவரையும் முட்டாளாக்கிவிடுவார்கள். விஜயகாந்த் சாரை நீங்கள் பார்த்திருப்பீர்கள், நல்லவர் வந்துவிட்டால் எல்லா கஷ்டங்களையும் கொடுத்து அழித்து வாழ்க்கையையே அஸ்மதனமாக்கிவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. பொருளாதாரத்தின் அடிப்படையில்தான் இந்த தேர்தல் இயங்குகிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. அப்படிப்பட்ட தேர்தல் முடிந்த பிறகுதான் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி உயர்ந்திருக்கிறதா என தெரியும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த களத்துடன் தற்போது ஒப்பிட முடியாது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகள் நன்றாகவே இருக்கிறது. அண்ணாமலைக்கென ஒரு வாய்ப்பு கிடைத்தால்தான் அவர் எப்படி என்பதை மக்களுக்கு நிரூபிக்க முடியும். சிறந்த காவல் துறை அதிகாரியாக இருந்து விட்டு பொது வாழ்க்கைக்கு வருவது சிறந்த விஷயம்தானே! எந்த குற்ற பின்னணியும் இல்லாமல் தான் படித்த காவல் துறையை பணியை கூட வேண்டாம் என சொல்லிவிட்டு மக்கள் பணிக்கு திரும்பியுள்ளார். எனவே அந்த விதத்தில் எனக்கு அண்ணாமலையை பிடிக்கும். இதுவரை இந்த தமிழ்நாடு என்ன சந்தித்திருக்கிறது? மதுவை ஒழிப்போம்னு சொன்னாங்க, செய்தார்களா, புகையிலையை ஒழிப்போம்னு சொன்னாங்க, அதையாவது செய்தார்களா, இலவச கல்வினு சொன்னாங்க, அதையும் செய்திருக்காங்களா? நான் இத்தனை ஆண்டுகளாக ஓட்டு போட்டுக் கொண்டிருக்கிறேன். இதுவரை யாரும் எந்த நன்மையையும் மக்களுக்கு செய்யவில்லை. ஒரு கவுன்சிலர் 2 கோடி செலவு செய்துதான் அந்த பதவிக்கு வருகிறார். இதை என் நண்பர் ஒருவரே தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் எப்படி நல்ல அரசியலை முன்னெடுக்கிறார். ஓட்டுக்கு பணம் வாங்கிக் கொண்டு இந்த திருடர்களுக்கே திரும்ப திரும்ப வாய்ப்பை கொடுக்காதீர்கள். தயவு செய்து அந்த மாற்றத்தை கொண்டு வாருங்கள். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அந்த மாற்றம் என்னவென உங்களுக்கு தெரியும். நான் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கவில்லை. எனவே விஜயதாரணி எதற்காக பாஜகவிற்கு சென்றார் என தெரியவில்லை. அது அவருடைய தனிப்பட்ட காரணங்களுக்காக கூட இருக்கலாம். நான் அரசியல்வாதி அல்ல, எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.