பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு அமெரிக்காவும் முழு ஆதரவு அளித்து வருகிறது. இதனை கண்டித்து, பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் சமீபத்தில் தீக்குளித்து உயிரிழந்தார். இந்நிலையில், அவரது மறைவுக்கு ஜி.வி.பிரகாஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோதும், இஸ்ரேல் அதை மதிக்கவில்லை. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் போர் நிறுத்த தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதெல்லாம், அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்ய வைத்திருந்தது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், சுதந்திரமான பாலஸ்தீனத்தை வலியுறுத்தியும் அமெரிக்காவின் விமானப்படை வீரர் ஒருவர் தீக்குளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி பகுதியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே இந்த தீக்குளிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமையன்று, வழக்கம்போல பணிக்கு வந்த விமானப்படை வீரர் தூதரகத்தின் வாசலுக்கு வந்து, “இனிமேலும் நான் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்க மாட்டேன். நான் எதிர்ப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று கூறி தனது உடலில் தீயை வைத்துக்கொண்டார். தீ பற்றி எரிய தொடங்கிய நிலையில், “பாலஸ்தீனத்தை விடுவிக்கவும், பாலஸ்தீனத்தை விடுவிக்கவும்” என்று தொடர்ந்து முழக்கமிட்டிருக்கிறார். இந்த சம்பவத்தின்போது உடன் பணியாற்றிய சில அதிகாரிகள், தீயை அணைத்துள்ளனர்.
இது குறித்து புலனாய்வு விசாரணையை அமெரிக்கா தொடங்கியுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, தற்கொலைக்கு முயன்ற நபர் அமெரிக்கா விமானப்படையில் பணியாற்றி வரும் வீரர் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவரது பெயர் ஆரோன் புஷ்னெல். இவர் கடந்த 2020ம் ஆண்டு முதல் அமெரிக்க விமானப்படையில் இருந்து வந்திருக்கிறார். தொழில்நுட்ப பிரிவில், கிளையன்ட் சிஸ்டம்ஸ் டெக்னீஷியனாகவும், DevOps இன்ஜினியராகவும் பணிபுரிந்திருக்கிறார். கல்வியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், அறிவியல் மற்றும் மென்பொருள் பொறியியல் சதர்ன் நியூ ஹாம்ப்ஷயர் பல்கலைக்கழகத்தில் பயின்றிருக்கிறார். தீக்குளிப்பு சம்பவத்தையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான கண்டனங்களை மேலும் வலுவடைய செய்திருக்கிறது.
இந்நிலையில் இவரது மறைவுக்கு பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில், “மனிதம் காக்க தன்னுயிர் ஈந்த மாமனிதனுக்கு என் கண்ணீர் அஞ்சலி. தற்கொலைகள் எந்த சூழலிலும் ஏற்புடையதல்ல” என்று கூறியுள்ளார்.