இளையராஜா இசையமைத்த பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் விலகியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் 4,500-க்கும் மேற்பட்ட பாடல்களை தங்களது நிறுவனங்கள் சார்பில் பயன்படுத்திக்கொள்ள எக்கோ ரெக்கார்டிங் மற்றும் அகி நிறுவனங்கள் இளையராஜாவுடன் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபிறகும் காப்புரிமை பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை அந்நிறுவனங்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாகக்கூறி எக்கோ மற்றும் அகி நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைநிறுவனங்களுக்கு உரிமை உள்ளது என உத்தரவிட்டிருநதார். அதை எதிர்த்து இளையராஜாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்நிலையில் அந்தப்படங்களின் காப்புரிமை தயாரிப்பாளர்களிடம் இருப்பதால், தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்தப்படங்களின் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதால், இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும், எனக்கோரி எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு விசாரணையில் இருந்து தான் விலகிக் கொள்வதாக நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதையடுத்து இந்த வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.