தேர்தலுக்காக வாக்கு செலுத்த வந்தபோது 4 பேர் பலி: மன்சூர் அலிகான் கோரிக்கை!

மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்தபோது மயக்கம் போட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பரபரப்பான ஆடியோ வெளியிட்டு இருக்கிறார் மன்சூர் அலிகான்.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் மன்சூர் அலிகான். அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட இவர் புதிய தமிழகம், லட்சிய திமுக உள்ளிட்ட கட்சிகளோடு இணைந்து தேர்தல் பணிகளை செய்து இருக்கிறார். 2019 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டார். அரை லட்சத்திற்கும் அதிக வாக்குகளை பெற்று கவனமீர்த்தார் மன்சூர் அலிகான். பின்னர் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சித் துவங்குவதாக கூறினார்.

2021 ல் தமிழ் தேசிய புலிகள் என தனது கட்சியைத் துவங்கினார் மன்சூர். மக்களவைத் தேர்தலின் அறிவிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு ஜனநாயக புலிகள் என அவரது கட்சிப் பெயரை மாற்றினார். கூட்டணி கைக்கூடாததால், வேலூர் மக்களவை தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக களமிறங்கினார்.
பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் குடியாத்தம் பகுதியில் உள்ள மருத்துவமணையில் அனுமதிக்கபட்டார் மன்சூர் அலிகான். மூச்சித்திணறல் ஏற்பட்டதால், சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் வந்தார் மன்சூர். தீவிர சிகிச்சை பெற்றபோதிலும், மறுநாள் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் மன்சூர்.

தேர்தலுக்காக வாக்கு செலுத்த வந்தபோது 4 பேர் பல இடங்களில் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த உயிரிழப்பு சம்பவம் தமிழநாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியது. முதல் இறப்பு ஏற்பட்டதும், பல்வேறு இடங்களில் மக்களின் தேவைக்காக வசதிகள் செய்யபட்டன. எனினும் பரிதாபமாக 4 பேர் உயிழந்தார்கள்.

இந்நிலையில், இந்த உயிரிழப்புகள் தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் மன்சூர் அலிகான். அந்த ஆடியோவில் அவர் கூறியுள்ளதாவது:-

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நான்கு பொதுமக்கள் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதற்கு தேர்தல் ஆணையமும், இந்திய அரசும் தான் முழுக் காரணம். லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து விளம்பரங்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு என வீணாக விளம்பரம் செய்துள்ளது, தேர்தல் ஆணையம். நான் வேலூரில் 180 பூத்களுக்கு மேல் சென்றேன். வெளியில் வாக்களிக்க வருபவர்களுக்கு தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இதனால் உயிரிழந்த நான்கு பேர் குடும்பத்திற்கும் தேர்தல் ஆணையம் முழுப் பொறுப்பேற்று, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு உடனடியாக வழங்க வேண்டும். அவசரகால இழப்பீடாக இதனை வழங்க வேண்டும். இனி வரும் தேர்தலில் இதுபோன்று நடைபெறக்கூடாது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.