வருடத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க: விஜய்யிடம் விநியோகஸ்தர் கோரிக்கை!

விஜய் நடிப்பில் உருவான ‘கில்லி’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி இயக்குநர் தரணி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘கில்லி’. விஜய்யின் கரியரில் முக்கியமான படமாக அமைந்த இப்படத்தில் த்ரிஷா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ‘ஒக்கடு’ படத்தின் ரீமேக்.

இப்படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 4கே டிஜிட்டல் தரத்தில் மெருகூட்டப்பட்டு கடந்த ஏப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிட்டுள்ளது. படம் வெளியான 2 நாட்களில் ரூ.12 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படத்தின் வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் வரவேற்பை தொடர்ந்து, படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து மாலை அணிவித்தார். பின்னர், “அரசியலுக்கும், மக்களுக்கும் நீங்கள் நிறைய நேரத்தை செலவிடுங்கள். ஆனால், வருடத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க. வியாபாரம் என்பதை தாண்டி, திரையரங்குகளில் கூஸ்பம்ஸ் தருணமாக உள்ளது” என்றார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.