வெற்றிமாறன் இயக்கி வரும் ‘விடுதலை 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ முதல் பாகம் கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் சூரி, விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்கள் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உட்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் அடுத்த பாகத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். 2-ம் பாகத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கான பின்புலத்தை முழுமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் வெற்றிமாறன். டிசம்பர் 20-ம் தேதி வெளியாக இருப்பதால், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்படி படத்தின் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
