தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் நடிகர் விஜய் சந்திப்பு!

நடிகர் விஜய் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்தார்.

விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். குடும்ப சென்டிமென்ட் கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் ஏராளமான திரை பிரபலங்கள் நடிக்க உள்ளனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார். மேலும், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். தளபதி 66 தமன் இசையமைக்க உள்ளார். விஜய்யின் தீவிர ரசிகரான தமன் முதல்முறையாக அவரது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனால் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டிலுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், தளபதி விஜய் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ், விஜய்க்கு சால்வை அணிவித்து வீணை ஒன்றை நினைவு பரிசாக அளித்தார். இந்த சந்திப்பின் போது, ராஜ்யசபா உறுப்பினர் ஜோகினா பள்ளி சந்தோஷ் குமார் உடனிருந்தார்.