கேப்டன் விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி!

விஜயகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கார்த்தி அவரை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை சந்தித்து வாழ்த்துக் கூறியுள்ளார். நடிகர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த விஜயகாந்த் மீண்டும் ரசிகர்களையும் தொண்டர்களையும் சந்தித்தது அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில், விஜயகாந்தை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்துள்ளார். விருமன் படத்தின் வெற்றிக்கு பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் புரமோஷனுக்காக பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் கார்த்தி விஜயகாந்தை தேமுதிக அலுவலகத்தில் நேரடியாக சென்று சந்தித்து பேசியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் சங்கம் சார்பாக பல ஆண்டுகள் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த். இந்நிலையில், நடிகர் சங்கம் சார்பாக நடிகர் கார்த்தி விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும், விஜயகாந்த் உடன் சிறிது நேரம் பேசிவிட்டு வந்தேன் என்றார். என்னை பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார். விஜயகாந்த் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது அவருடைய தைரியம் தான். அதேபோல், யார் வந்தாலும் சாப்பிடலாம் என்று சிறு வயதிலிருந்தே கேள்விபட்டிருக்கேன். யாரிடமும் எந்த பாகுபாடும் இல்லாமல் அன்பு காட்டுவது எவ்வளவு பெரிய விஷயம். இப்படி ஒரு மனிதரை அவருடைய பிறந்தநாளில் நேரில் வந்து வாழ்த்துவது தான் அவருக்கு செய்யும் மரியாதையாக இருக்கும். அதிலும் சங்கம் சார்பாக வந்து வாழ்த்தியது நிறைவாக உள்ளது என்றார்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் திரைப்பட பெயர்களை வைத்தே அவருக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

“வானத்தைப் போல” பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.